புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை கால விடுமுறையை கொண்டாட தேனி எல்லையில் ஒரு ஜாலி சுற்றுலா

கூடலூர்: தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும், தமிழக-கேரள எல்லை பகுதிகளும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள மூணாறு, தேக்கடி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. புத்தாண்டு விடுமுறையை கொண்டாட ஒரு இன்ப சுற்றுலாவாக, பார்க்கும் இடம் எல்லாம் பச்சைப் பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சி, மண்வாசனை, நாசி துளைக்கும் பலாப்பழ வாடை இவையெல்லாம் கண்டு அனுபவிக்க, தேனி எல்லையில் ஒரு ஜாலி டிரிப்புக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

தேக்கடி மற்றும் ராமக்கல் மெட்டு:

தேனி மாவட்ட தமிழக எல்லை குமுளியிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலம் தேக்கடி. இயற்கை எழிலை ரசித்துச்செல்லும் சுற்றுலாப்பயணிகள் குமுளியிலிருந்து தேக்கடி படகுத்துறைக்கு நடந்து செல்கின்றனர். பெரியாறு அணையில் தேங்கி நிற்கும் நீர்தேக்கப் பரப்பின் இயற்கை சூழலில் வாழும் விலங்குகளை கண்டு ரசித்தவாறு படகுச்சவாரி செய்வது தேக்கடியின் சிறப்பு. அதுபோல், கம்பம்மெட்டிலிருந்து 13 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது ராமக்கல் மெட்டு. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5ஆயிரம் அடி உயரத்திலுள்ள இப்பகுதி ஆசியாவில் அதிக காற்றுவீசும் பகுதிகளில் ஒன்றாகும். இங்குள்ள குலும்பன் என்ற ஆதிவாசி குறவன், மனைவி குழந்தையுடன் இருக்கும் 40 அடி உயர பிரமாண்டமான சிலை உள்ளது. மலைஉச்சிப்பகுதியிலிருந்து தமிழகத்தின் இயற்கை எழிலையும், மின்சாரம் தயாரிக்கும் காற்றாலைகளையும் கண்டு ரசிப்பதும் கண்களுக்கு விருந்தாகும்.

இடுக்கி அணையும், வாகமண்ணும்:

கம்பம்மெட்டிலிருந்து 50 கிமீ தூரத்தில் உள்ளது இடுக்கி. ஆசியாவின் 2வது மிகப்பெரிய அணையான இடுக்கி ஆர்ச்டேம் இங்குள்ளது. 839 அடி உயரமுள்ள குறவன் மலையையும், 925 அடி உயரமுள்ள குறத்திமலையையும் இணைத்து 555 உயரத்திற்கு கட்டப்பட்ட அணை இது. 555 அடி உயர அணையில் ஸ்பீடு போட்டில் சவாரி செய்வது திரில்லான அனுபவம்தான். இதை அடுத்து செறுதோணி அணை, பார்க், மற்றும் மூலமட்டத்தில் உள்ள மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி நிலையம் பார்க்க கூடியவை. பாதுகாக்கப்பட்ட அணை என்பதால் சுற்றுலாப்பயணிகளுக்கு அடையாள அட்டை கட்டாயம். குமுளியிலிருந்து ஏலப்பாறை வழியாக 45 கி.மீட்டரில் உள்ளது வாகமண்.

கடல்மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள வாகமண்ணில் தற்கொலை விளிம்பு, மொட்டைக்குன்றுகள், பைன்மரக்காடுகள், வாகமண் அருவி, பாரா கிளைடிங் பயிற்சி இடம் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்கவேண்டிய இடம். ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் பாராகிளைடிங் போட்டி நடைபெறுகிறது.

கெவியும், பருந்தும்பாறையும்:

தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதிக்குள் அமைந்திருக்கு சுற்றுலாப்பகுதி கெவி. கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதிக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்று திரும்ப கேரள வனத்துறையின் ‘‘ஜங்கிள் சபாரி’’ என்ற பஸ் இயக்குகின்றனர். வண்டிப்பெரியாறு வள்ளக்கடவு வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து 16 கிமீவரை செல்லும் 3 மணிநேர பயணத்துக்கு நபர் ஒன்றுக்கு ரூ.400 கட்டணமாகவும், ரூ.25 நுழைவுக் கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. வண்டியில் இருந்தே வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம். குமுளியிலிருந்து சுமார் 28 கிமீ தொலைவில் உள்ளது பருந்தும்பாறை. இதுவும் கடல் மட்டத்திலிருந்து ஐந்தாயிரம் அடி உயரத்தில் உள்ளது. இயற்கை பனிமூட்டம் மூடிய தற்கொலை பாறை விளிம்புகளும், தாகூர் பாறையும் ரசிக்கக்கூடியவை.

செல்லார் கோவில் மெட்டு:

குமுளியை அடுத்து 13 கிமீ தொலைவில் உள்ள செல்லார் கோவில்மேட்டில் உள்ள அருவிக்குழி நீர்வீழ்ச்சி தான் கூடலூர் மந்தை வாய்க்கால் பகுதியில் வரும் சுரங்கனாறு நீர்வீழச்சி. இங்கிருந்து தமிழகத்தின் இயற்கை எழிலைக்காணலாம். கம்பம்மெட்டில் இருந்து 22 கிமீ தொலைவில், கட்டப்பனையிலிருந்து ஏலப்பாறை செல்லும் வழியில் 9 கிமீ தொலைவில் உள்ளது அஞ்சுருளி. இடுக்கி அணையின் ஆரம்பம் இதுவே. இரட்டையார் அணையிலிருந்து அஞ்சுருளிக்கு தண்ணீர் வரும் டணல் (குகை) இங்கு சிறப்பு மிக்கது. ஐந்து மலைகள் உருளி (அண்டா) கவிழ்த்திவைத்ததுபோல் இருந்ததால் ஆதிவாசி குடிகள் இதற்கு அஞ்சுருளி எனப்பெயரிட்டுள்ளனர்.

அஞ்சுருளி மற்று்ம அம்மச்சி கொட்டாரம்:

குமுளியிலிருந்து 35 கிமீ தூரத்திரல் குட்டிக்கானம் அருகே உள்ளது அம்மச்சி கொட்டாரம். குட்டிக்கானம் பனி படர்ந்த மலைகளுக்கு பெயர் பெற்றது. இங்கு 200 ஆண்டுகள் பழமையான அம்மாச்சிக்கொட்டாரம் (முன்பெல்லாம் ஆட்சியாளர்களின் மனைவிமார்கள் அம்மச்சி (அம்மா) என்று அழைப்பார்கள்) என்னும் அரண்மனை 25 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வன மரங்களுக்கு நடுவே அமைந்துள்ளது.அரண்மனையை நேரில் பார்க்கும் போது திகில் நிறைந்த பேய்மாளிகை படங்களை நினைவூட்டும்.

அய்யப்பன்கோவில் கோயில் மற்றும் தொங்குபாலம்:

கட்டப்பனையிலிருந்து 14 கிமீ தொலைவில் பெரியாற்றின் குறுக்கே அய்யப்பன்கோவில் பஞ்சாயத்து மற்றும் காஞ்சியாறு ஊராட்சியை இணைக்கும் இரும்பு தொங்கு பாலம் கடந்த 2012ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. திரைப்படங்களில் இந்த தொங்கு பாலத்தின் காட்சிகள் வெளியானதன் மூலம், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.

Related Stories: