திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆலய நிதி ரூ.100 கோடியில் வளர்ச்சி பணிகள்: அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆலய நிதி ரூ.100 கோடியில் நடைபெற உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆலோசனை நடத்தினார். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை மேம்படுத்துவதற்காக இந்து சமய அறநிலையத்துறையும், பிரபல சாப்ட்வேர் நிறுவனமான ஹெச்சிஎல்லும் இணைந்து 300 கோடி ரூபாய் செலவில் மெகா மேமம்பாட்டு திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ரூ.200 கோடியில் கோயில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வறை அமைத்தல், பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை, தீத்தடுப்பு கண்காணிப்பு, முடி காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக் கூடம், கோயில் வளாகத்தில் சாலை வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதோடு கோயில் நிதி ரூ.100 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, சலவைக் கூடம், சுகாதார வளாகம், பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்புக் கட்டிடம், பணியாளர் குடியிருப்பு, கோயிலின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் அன்னதானக் கூடம் கட்டப்பட்டு வருகிறது. கோயில் பேருந்து நிலையத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருக்கோயில் நிதி ரூ.100 கோடியில் செய்யப்படும் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடியில் வந்திறங்கிய அமைச்சர் சேகர்பாபு அங்கிருந்து காரில் திருச்செந்தூருக்கு வந்தார். கோயிலில் சரவணப் பொய்கை யானை குளியல் தொட்டி கட்டும் பணியை ஆய்வு செய்தார். பின்னர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், கோயிலின் உள்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து செல்போன் பாதுகாப்பு அறையை திறந்து வைத்த அவர், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 மினி பஸ்களை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் 25 ஆண்டுகள் சிறந்த முறையில் பணியாற்றிய 10 திருக்கோயில் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து பெருந்திட்ட வரைவு, உபயதாரர் பணியை ஆய்வு செய்த அவர், யாத்ரி நிவாஸ் கட்டுமான பணியை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் செந்தில்ராஜ், ஆர்டிஓ புகாரி, இணை ஆணையர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: