திமுக ஆட்சியில் பல கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் வளர்ச்சியை நோக்கி தேனி-அல்லிநகரம் நகராட்சி

*பொதுமக்கள் மகிழ்ச்சி

தேனி : திமுக ஆட்சியில் பல கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளால் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் தேனி-அல்லிநகரம் நகராட்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதலாக அனைத்து துறைகளின் வளர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளி்த்து வருகிறார். சாலைமேம்பாட்டு பணிகள், நகர்புற மேம்பாட்டு பணிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருவதன்காரணமாக அனைத்து நகராட்சிகளிலும் வளர்ச்சித் திட்டப்பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் மாநில நிதியோடு ஒன்றிய அரசின் நிதியையும் முறையாக பராமரித்து நகர்புற மேம்பாட்டுக்கு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில், இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம், உயிர்காக்கும் 48  சிகிச்சை, புதுமைப்பெண், வானவில் போன்ற திட்டங்கள் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நகராட்சி  மற்றும்  பேரூராட்சி பகுதிகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டங்கள் மூலமாக ரூ. பல கோடி அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேனி - அல்லிநகரம் நகராட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்பீட்டில் தேனி நகர் கர்னல் ஜான்பென்னிகுக் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அறிவுசார் மையம்  கட்டுமானப்பணி நடந்து வருகிறது. தரைத்தளத்தில் 4 ஆயிரத்து 648 சதுரஅடியும், முதல் தளத்தில் 1624 சதுர அடியிலுமாக இக்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

அறிவுசார் மையத்தில் நூலகம் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு படித்த பட்டதாரிகள், பொறியாளர்கள் தயாராகும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தவும் தேவையான உள்கட்டமைப்பு வசதியுடன் கட்டிடம் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது.தேனி- அல்லிநகரம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 30 வார்டுகளில் ரூ.1 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் மண்சாலைகள் பேவர் பிளாக் பதித்த சாலைகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

தேனி நகர மக்களின் சுகாதாரத்தை பேணும் வகையில் ஏற்கனவே நகராட்சி நிர்வாகத்தின் கீழ் ரயில்வே நிலையம் செல்லும் சாலையிலும், அல்லிநகரத்திலும் இரண்டு நகர் நல சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்விரு மையங்களிலும் டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வசதியை விரிவுபடுத்தும் வகையில், ஒண்டிவீரன் நகர் மற்றும் தேனி தீயணைப்பு நிலையம் அருகே என இரு இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு நகர் நல மையங்கள் ஏற்படுத்தப்படும் வகையில் கட்டுமானப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. இவ்விரு நகர் நல மையங்களிலும் ஒரு டாக்டர். ஒரு செவிலியர் நியமிக்கப்பட்டு கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம் பார்க்கப்பட உள்ளது.

இது தவிர அல்லிநகரத்தில் உள்ள நகர் நல சுகாதார நிலையத்தில் 1400 சதுர அடிப்பரப்பளவில் மேல்தளம் கட்டுமானப்பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இக்கட்டிடம் கட்டியபிறகு, உள்நோயாளிகள் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தேனி நகரில் எரியும் நகராட்சி தெருமின்விளக்குகளால் மின்சார கட்டணம் அதிகரிப்பதை தவிர்க்கும் வகையில், சாதாரண மின்விளக்குகளை மின்சார சேமிப்பு விளக்குகளாக மாற்றும் வகையில் ரூ.3 கோடியே 79 லட்சம் செலவில் 3 ஆயிரத்து 86 எல்இடி பல்புகள் மாற்றும் பணி நடந்து வருகிறது.

மேலும், தேனி நகரில் இரவு நேரங்களில் சாலைவிபத்தை தடுக்க சாலையின் நடுவே மையத்தடுப்பானின் நடுவே இரு விளக்குகளுடன் கூடிய 184 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் சாலைகள் ஜொலித்து வருகிறது. தேனி நகர் விஎம்.சாவடி, கேஆர்ஆர் நகர் மற்றும் 32 வது வார்டான திட்டச்சாலை சந்திப்பில் ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் 3 சிறு மின்சாரகோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேனி நகரினை சுத்தமான மற்றும் சுகாதாரமான நகராட்சியாக அமைத்திடும் வகையில் பழைய கம்போஸ்ட் ஓடைத்தெருவில் பன்னெடுங்காலமாக மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைகளை ரூ.60 லட்சம் செலவில் பயோ மைனிங் முறையில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் உள்ள சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள மழைக்காலங்களில் கழிவுநீரோடைகளை சீரமைக்க ஜேசிபி இயந்திரம் தேவையென்பதை உணர்ந்து நகராட்சி நிர்வாகம் ரூ.37 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் ஜேசிபி இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

நகர மக்களின் பொழுதுபோக்குக்காகவும், உடல்நலனை பேணும் வகையில் தேனி சமதர்மபுரம் அருகில் காமராஜர் பூங்காவானது ரூ.31.5 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இப்பூங்காவில், நடைமேடை சிறுவர்கள் விளையாடி மகிழ சறுக்கு, ஊஞ்சல், வாலிபர்களின் விளையாட்டை ஊக்குவிக்ககும் வகையில் பூங்கா வளாகத்தில் பூப்பந்து மற்றும் இறகு பந்தாட்ட மைதானம் ஆகியவை தயார் செய்யப்பட்டு வருகிறது.இதன்படி, தேனி அல்லிநகரம் நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகள் நிதியின்றி எவ்வித மேம்பாட்டு பணிகளும் நடக்காத நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளால் தேனி - அல்லிநகரம் நகராட்சி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories: