சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 43 பவுன் நகை, ரூ.18 லட்சம் கொள்ளை: வேடசந்தூரில் முகமூடி கும்பல் அட்டகாசம்

வேடசந்தூர்: வேடசந்தூரில் வீட்டிற்குள் புகுந்து சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 43 பவுன் நகை, ரூ.18 லட்சத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே சாலையூர் நால் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (40). ரியல் எஸ்டேட் அதிபர். மனைவி கலையரசி (35). 14 வயதில் மகன், 13 வயதில் மகள் உள்ளனர். சீனிவாசன் வெளியில் சென்று இருந்த நிலையில், அவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த முகமூடி அணிந்த 5 பேர் கும்பல், மகன், மகளின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு கலையரசியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பின்னர் வீட்டில் வைத்திருந்த பீரோக்களையும் உடைத்து, 43 பவுன் நகைகள் மற்றும் பணம் ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் யாருக்கும் தகவல் தெரிவிக்க கூடாது என கூறி வீட்டில் இருந்த செல்போன்களையும் பறித்துச் சென்றுள்ளனர். பின்பு வீட்டுக்கு வந்த சீனிவாசனிடம், அவரது குடும்பத்தினர் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளனர்.  தகவலறிந்த  திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஸ் குமார் மீனா, எஸ்பி பாஸ்கரன், துணை கண்காணிப்பாளர் சந்திரன் மற்றும் போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: