கிறிஸ்துமஸ் தினத்தில் வீடுகளில் முடங்கிய மக்கள் அமெரிக்காவில் அசுர பனிப்புயல் பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு: லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின

பப்பலோ: அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் வீசிய பனிப்புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 2 நாட்களாக 40 மைல் வேகத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் வீசி வரும் பனிப்புயல் அமெரிக்காவை புரட்டி போட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. மைனஸ் 48 டிகிரி செல்சியசில் குளிர் வாட்டி வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பப்பலோ உள்ளிட்ட நகரங்களில் வீடுகளை பனி சூழ்ந்து உள்ளது. பப்பலோ விமான நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் 109 செ.மீ. உயரத்துக்கு பனி மூடிக்கிடக்கிறது. அமெரிக்காவை உலுக்கி வரும் அசுர பனிப்புயலால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை இழந்தது. கிறிஸ்துமஸ் தினத்தன்று கூட மக்கள் எங்கும் செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கினர்.

சியாட்டில், வடக்கு கரோலினா, எர்ரி, நயாகரா உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் 17 லட்சம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. கென்டக்கி, மிசோரி, நியூயார்க், கொலரோடா உள்ளிட்ட மாகாணங்களில் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பப்பலோவில் 6 பேர், ஒகியோவில் மின்சாரம் தாக்கி, பனிப்புயலில் ஏற்பட்ட கார் விபத்தில் 6 பேர் என மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர். சாலைகளில் பலர் உயிரிழந்து பிணமாக கிடக்கின்றனர். இதனால் பனிபுயலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.

போக்குவரத்து தடை; விமான சேவை ரத்து

* வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கள் ஏற்படுவதால், நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* 1,707 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. நியூயார்க்கில் செவ்வாய்கிழமை (இன்று) வரை விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று நியூயார்க் நகர மேயர் கேத்தி ஹோச்சல் தெரிவித்துள்ளார்.

* அவசர உதவிக்கு கூட ஆம்புலன்சுகள் செல்ல முடியாத நிலை உள்ளது.

* கனடாவிலும் பனிப்புயல்

அமெரிக்காவைப் போல் கனடா நாட்டிலும் பனிப்புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவின் கிரேட் லேக்ஸ் பகுதியில் தொடங்கி, மெக்சிகோவின் ரியோ க்ராண்ட் பகுதி வரை பனிப்புயல் பாதித்துள்ளது.

Related Stories: