நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு கள ஆய்வு-ரூ.1.36 லட்சம் அபராதம் வசூல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 1 லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் பயன்படுத்த தடை இருப்பது சுற்றுலா பயணிகள் பலருக்கு தெரிவதில்லை. இதனால் கேரளா, கர்நாடகா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தங்களுடன் ஒரு லிட்டர் பாட்டில்களை எடுத்து வந்து பயன்படுத்தி விட்டு வீசி செல்கின்றனர். இதனை தடுக்கும் நோக்கில் ஊட்டி நகராட்சி நகர்நல அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் சுகாதார ஆய்வாளர் மகாராஜன் உள்ளிட்டோர் ஊட்டி நகரில் தாவரவியல் பூங்கா பார்க்கிங், அசெம்பிளி ரூம்ஸ் பார்க்கிங், ஆர்சிடிசி., பார்க்கிங் உள்ளிட்ட பார்க்கிங் தளங்களில் நிறுத்தப்படும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ஆய்வு செய்தனர்.

இதில் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்து சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் ஒரு காட்டேஜில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்து சீல் வைக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. ஊட்டி நகராட்சி பகுதிகளில் ரூ.13 ஆயிரமும், கூடலூர் நகராட்சியில் ரூ.8 ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல் ஊட்டி, குந்தா, கோத்தகிரி, குன்னூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் தாசில்தார்கள் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு ரூ.95 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

 ஊட்டி வட்டத்தில் 2 கடைகளுக்கும், குன்னூர் வட்டத்தில் ஒரு கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. கோத்தகிரி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.3800ம், 11 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல் அலுவலர்கள் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு மொத்தம் ரூ.16 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

 நீலகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

Related Stories: