போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவதே இலக்கு: அதிபர் புடின் அறிவிப்பு

மாஸ்கோ: சிறந்த முறையில் போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவதே ரஷ்யாவின் இலக்கு என்று அதன் அதிபர் புடின் தெரிவித்தார். உக்ரைன்-ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய போர் இன்றுடன் 11வது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதி, ஆயுத உதவி வழங்கி வருகின்றன. அதே போல, இந்தியா, சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாக ஐநா உள்ளிட்ட அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு வாக்களிக்காமல் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், கிரெம்ளின் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் புடின், ``இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதே ரஷ்யாவின் இலக்கு. இதற்காக ரஷ்யா பாடுபட்டு வருகிறது. சிறந்த முறையில், இப்போர் விரைவாக முடிவுக்கு கொண்டு வரப்படும். பேச்சுவார்த்தை உள்ளிட்ட ஏதாவதொரு புலத்தின் பின்னணியில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்,’’ என்று தெரிவித்தார். உக்ரைன் உடனான பேச்சுவார்த்தையை ரஷ்யா ஒருபோதும் நிராகரிக்கவில்லை என்று கடந்த சில மாதங்களாக கூறி வரும் ரஷ்ய ராணுவ அதிகாரிகள், அதிபர் புடின் பதவியில் இருக்கும் வரை, தான் பேச்சுவார்த்தைக்கு வரப்போவதில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிபட கூறியதாக தெரிவித்தனர்.

Related Stories: