கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறை கைதிகளுக்கு சிக்கன் பிரியாணி

சேலம்: உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது கிறிஸ்துமஸ் ஆகும். இதையொட்டி ஆண்டுதோறும் இந்திய சிறைப்பணி என்ற அமைப்பினர், சிறையில் இருக்கும் கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்கி வருகின்றனர். வருகிற 25ம் தேதி (ஞாயிறு) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், தமிழகம் முழுவதுமுள்ள மத்திய, மாவட்ட, கிளைச்சிறைகளில் உள்ள கைதிகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்க, தமிழக சிறை டிஐஜியிடம் அனுமதி பெற்றனர். அதன்படி, வரும் 25ம் தேதி வரை ஒவ்வொரு சிறையிலும் சிறப்பு உணவு வழங்கப்படும். இவ்வாறு சிறப்பு உணவு வழங்க வேண்டும் என்றால், சிறையின் வெளியில் இருந்து உணவுகளை தயாரித்து கொண்டு செல்ல அனுமதி இல்லை.

பிரியாணிக்கான உணவு பொருட்களை வாங்கி கொடுத்து விட வேண்டும். அவர்களே சமைத்து வழங்குவார்கள். அதன்படி நேற்று, சேலம் மத்திய சிறை மற்றும் பெண்கள் கிளைச்சிறையில் 300 கிலோ சிக்கன் மற்றும் அதனை தயாரிக்க பயன்படும் சமையல் பொருட்கள் அனைத்தும் வாங்கி கொடுக்கப் பட்டது. மேலும் சமையல் செய்வதற்காக பணியாளர்களும் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து, கமகம பிரியாணி தயாரிக்கப்பட்டு, மத்திய சிறையில் உள்ள 1158 கைதிகள், பெண்கள் சிறையில் உள்ள 59 கைதிகள், பணியாளர்கள் என மொத்தம் 1600 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அதனுடன் தயிர் பச்சடி, கேக் வழங்கப்பட்டது.

Related Stories: