பருவமழை, மாண்டஸ் புயலால் பரவலாக மழை ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு உயர்வு

*கோடையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் வாய்ப்பு குறைவு

ஊட்டி :  தென்மேற்கு, வடகிழக்கு மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக  ஊட்டியில் பரவலாக பெய்த மழை காரணமாக பார்சன்ஸ்வேலி அணை உட்பட ஊட்டி நகராட்சியின் குடிநீர் ஆதாரங்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் இம்முறை கோடையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் வாய்ப்பு குறைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 36 வாா்டு பகுதிகளில் சுமாா் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். இதுதவிர ஆண்டிற்கு சுமார் 28 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். உள்ளூர் மக்கள் மற்றும் வருகை புரியும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊட்டி நகராட்சியின் கட்டுபாட்டில் உள்ள அணைகள், நீர்தேக்கங்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீா் ஆதாரமாக பாா்சன்ஸ்வேலி அணை விளங்கி வருகிறது. இதுதவிர மார்லிமந்து, டைகர்ஹில் உள்ளிட்ட அணைகள், கோரிசோலை, கோடப்பமந்து, அப்பர் தொட்டபெட்டா உள்ளிட்ட நீர் தேக்கங்களில் இருந்தும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. பார்சன்ஸ்வேலி அணை நீர் மின் உற்பத்திக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஊட்டி நகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்கென பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து மூன்று குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நீலகிரியில் ஆண்டுதோறும் ஜூன் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளின் போதும், கோடை காலங்களில் பெய்யும் மழையின் போதும் இந்த நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டி விடும். இதனால் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. இந்த சூழலில் நடப்பு ஆண்டில் ஏப்ரல், மே என கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்தது. குறிப்பாக பார்சன்ஸ்வேலி, டைகர்ஹில் பகுதிகளில் கன மழை பெய்ததால் இங்குள்ள அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.

இதர நீர்தேக்கங்களிலும் தண்ணீர் இருப்பு கணிசமாக அதிகரித்தது. இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி செப்டம்பர் வரை நீடித்த தென்மேற்கு பருவமழை, அதன் பின் துவங்கி அவ்வப்போது பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழை என பரவலாக மழை பெய்த நிலையில், ஊட்டி மட்டுமின்றி மாவட்டம் முழுவதிலும் உள்ள அணைகள், நீர்நிலைகளில் நீர்மட்டம் முழுமையாக நிரம்பியது.

தற்போதைய நிலவரப்படி பார்சன்ஸ்வேலி அணையின் மொத்த கொள்ளளவான 50 அடியில் தற்போது 31.50 அடிக்கு நீர் உள்ளது. இதேபோல் மார்லிமந்து அணை முழுமையாக நிரம்பி மொத்த கொள்ளளவான 23 அடியும், டைகர்ஹில் அணையில் மொத்த கொள்ளளவான 39 அடியும் நீர் இருப்பு உள்ளது. இதனால் இம்முறை கோடை சமயத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘தென்மேற்கு, வடகிழக்கு மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக  ஊட்டியில் பரவலாக பெய்த மழை காரணமாக பார்சன்ஸ்வேலி அணை உட்பட ஊட்டி நகராட்சியின் குடிநீர் ஆதாரங்களில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக மார்லிமந்து, டைகர்ஹில் அணைகள் மற்றும் இதர நீர் தேக்கங்கள் முழுமையாக நிரம்பி உள்ளது. இதனால் இம்முறை கோடையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் வாய்ப்பு குறைந்துள்ளது’ என்றனர்.

Related Stories: