பாஜ தலைவர் நட்டா பதவிக்காலம் நீட்டிப்பு?; அடுத்த மாதம் தேசிய செயற்குழுவில் முடிவு

புதுடெல்லி: பாஜ தலைவராக உள்ள ஜேபி நட்டாவின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் அடுத்த மாதம் டெல்லியில் பாஜவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாஜவின் தேசிய செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகம், மற்றும் கட்சியின் பணிகள் குறித்து மறுஆய்வு செய்யப்படும். மாநிலத்தேர்தல்கள் மற்றும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பாஜ உட்கட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாஜ தலைவராக உள்ள ஜேபி நட்டாவின் மூன்றாண்டு பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகின்றது.

இதனால், நட்டாவின் பதவிக்காலம் கூட்டத்தில் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. கட்சியின் அடுத்த தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை தொடங்குவதற்குள் கட்சியில் பாதிக்கும் மேற்பட்ட மாநில பிரிவுகளின் உட்கட்சி தேர்தல் முடிந்திருக்க வேண்டும். எனவே 2024ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவை தேர்தல் முடிந்ததும் உள்கட்சி தேர்தல் செயல்முறை தொடங்கும்.  கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போதும் அப்போதைய கட்சியின் தலைவராக இருந்த அமித் ஷாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: