சர்வதேச லீக் டி 20 போட்டி: துபாய் அணியில் ராபின் உத்தப்பா

மும்பை:இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா துபாய் அணிக்காக டி20 போட்டியில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். சர்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக கடந்த செப்டம்பர் மாதம் அதிரடி ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த அவர், தற்போது வெளிநாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். உத்தப்பாவுக்கு தற்போது 37 வயதாகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச லீக் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் துபாய் கேபிடல்ஸ் அணியில் விளையாட ராபின் உத்தப்பா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டியை எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு நடத்துகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில், இந்த கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. மொத்தம் 6 அணிகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்கின்றன. ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக், வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடரில் விளையாட ராபின் உத்தப்பா அழைக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைபெறும் டி 20 போட்டி தொடரிலும் பங்கேற்பேன் என உத்தப்பா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்திய அணியில் கடந்த 2006 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இடம்பெற்றிருந்த உத்தப்பா, 46 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், 13 டி20 போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15 சீசன்களில் ஆறு வெவ்வேறு அணிகளுக்காக உத்தப்பா களமிறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: