சிவகாசியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைவது எப்போது-உடனடியாக பணி தொடங்க ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை

சிவகாசி : சிவகாசியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மைய பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன.

இந்த ஆலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி பசுமை பட்டாசு தயாரித்து வருகின்றனர். இந்தியாவிற்கு தேவையான பெரும்பகுதி பட்டாசுகள் சிவகாசியில் தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. பட்டாசு தொழிலை மேம்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆராய்ச்சி மையம் அமைக்க புரிந்துணவு ஒப்பந்தம்: இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழக தலைமை விஞ்ஞானி சாதனா ராயலு, விஞ்ஞானி சரவணன் மற்றும் 6 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். அப்போது, ‘சிவகாசியில் பட்டாசு ஆலை வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் துவங்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் கழக தலைமை விஞ்ஞானி சாதனா ராயலு கையெழுதிட்டார். இதற்காக தெற்கு ஆனைக்குட்டம் கிராமத்தில் நிலம் வழங்குவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

சிவகாசியில் அமைய உள்ள ஆராய்ச்சி மைய கட்டிடத்தில், பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்ற வேதிப்பொருட்கள் இந்தியா முழுவதும் உள்ள கெமிக்கல் ஆலை மற்றும் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்த அனுமதிக்கபடும். இதேபோல, பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தபடும் மூலப்பொருட்களின் தரமும் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இதன்மூலம் சுற்றுச்சூழல் மாசு இல்லாத தரமான வேதிப்பொருட்களை பயன்படுத்த முடியும். பட்டாசு ஆலைகளில் மாசில்லா பட்டாசுகள் தயாரிக்க இந்த ஆராய்ச்சி மையம் உறுதுணையாக இருக்கும் என விஞ்ஞானிகள் ெதரிவித்திருந்தனர். ஆனால், பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்க இதுவரை எந்தவித பூர்வாங்க பணிகளும் நடைபெறவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதுடன் உள்ளது. எனவே, சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மையத்தை துவங்க உடனடி நடவடிக்கை எடுக்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘நீரி அமைப்பு அனுமதித்துள்ள பசுமை பட்டாசில் 30 சதவீதம் புகை மாசு குறைந்துள்ளது. இதனை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது. நீரியில் இதுவரை 1,000 பட்டாசு ஆலைகள் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். நீரியில் பதிவு செய்யாத மற்ற பட்டாசு ஆலை உரிமையாளர்களும், ஆன்லைன் மூலம் பதிவு செய்துவருகின்றனர். எனவே, பட்டாசு தொழிலை மேம்படுத்தும் வகையில் சிவகாசியில் துவங்படவுள்ள பட்டாசு ஆராய்ச்சி மையத்தை உடன துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: