உடல் எடை 100 கிலோ, சர்க்கரை அளவு 228 மி.கி. ஜெயலலிதாவுக்கு ஆபரேஷன் சரியா? சுயபரிசோதனை செய்யுங்கள்: நீதிபதி ஆறுமுகசாமி கோவையில் பேட்டி

கோவை: ஜெயலலிதாவின் உடல் எடை 100 கிலோ, சர்க்கரை அளவு 228 மி.கி. இருந்துள்ளது. இப்படிப்பட்ட ஒருவருக்கு ஆபரேஷன் செய்யலாமா? நீங்களே சுயபரிசோதனை செய்யுங்கள் என்று நீதிபதி ஆறுமுகசாமி கூறினார். கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், மறைந்த மூத்த வழக்கறிஞர் டி.ஆர். நடனசபாபதி படத்திறப்பு விழா கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் ஓய்வுபெற்ற நீதிபதியும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் தலைவருமான ஆறுமுகசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, டி.ஆர்.நடனசபாபதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை பற்றி என்னிடம் பலர் கேட்கிறார்கள். நீங்கள் சொல்லும் முடிவை எப்படி ஏற்றுக்கொள்வது என்றும் கேட்கிறார்கள். அதற்கு நான் சொல்வது என்னவென்றால், ஜெயலலிதாவின் வயது 68, உயரம் 5 அடி, எடை 100 கிலோ, சர்க்கரை அளவு 228 மில்லிகிராம், ரத்த அழுத்தம் 160, கிரியேட்டின் அளவு 6.8, உடல் பருமன், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் என இத்தனை கோளாறு இருந்துள்ளது. இதற்கு சர்ஜரி செய்யலாமா? வேண்டாமா? என்பதுதான் முக்கிய விஷயம்.

அவரது உடல் பருமன், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் இதற்கு அறுவை சிகிச்சை செய்யலாமா? வேண்டாமா? என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள் என தெரிவித்தேன். இதே மாதிரி ஒருவர் உயிருடன் இருப்பதுபோல், ஒரு மருத்துவரை வைத்து, உலகில் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். முடிவு எதுவாக இருக்கும் என்று நீங்களே  ஆய்வின் அறிக்கையை பரிசோதனை செய்து கொள்ளலாம். இங்கு நான் அதிகம் பேசினால் அரசியல் ஆகிவிடும். ஒரு நபர் விசாரணை கமிஷன் அறிக்கை முறைப்படி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆறுமுகசாமி கூறினார்.

Related Stories: