நம்ம ஸ்கூல்'திட்டத்திற்கு தனது சொந்த பணத்தில் இருந்து, ரூ. 5 லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு தனது சொந்த பணத்தில் இருந்து, ரூ. 5 லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார். தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து அதற்கான இணையதளத்தையும் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீங்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டிலும் உங்கள் சொந்த ஊரிலும் உங்கள் வேர்கள் வலுப்படவேண்டும். உங்களை வளர்த்த உங்கள் மண்ணுக்கு நீங்கள் செய்த, அதை நீங்கள் திருப்பிச் செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு நம்ம ஸ்கூல் வாயிலாக, நம்ம பள்ளி வாயிலாக நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. நம்முடைய குழந்தைகள் வளர்ந்து உங்கள் நிறுவனங்களையும், பெருநிறுவனங்களையும், தமிழ்நாட்டின் கிராமங்களையும், நகரங்களையும் முன்னேற்றுவார்கள்.

அவர்கள் நம் வளத்தையும், நம்பிக்கையையும் திட்டங்களையும் வளர்த்தெடுப்பார்கள் என்று முதல்வர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அதிகம் கொண்டாடப்படும் இருவர் நம்ம ஊர் பள்ளி நடைபோட முன்வந்துள்ளதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தமிழ்நாட்டின் தொழிற்துறையில் மிகச் சிறப்பான நிலையில், முன்னிலையில் இருக்கக்கூடிய திரு. வேணு சீனிவாசன் அவர்கள், இந்த நம்ம ஸ்கூல் பவுண்டேஷனின் தலைவராக இருப்பதும், பவுண்டேஷனின் தூதுவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் இருப்பதும் நமக்கெல்லாம் கிடைத்திருக்கக்கூடிய பெருமை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

அறிவுப்பூர்வமான விளையாட்டான செஸ் விளையாட்டு வீரராக தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பல்வேறு பெருமைகளை தேடித் தந்த திரு. விஸ்வநாதன் ஆனந்த் அவர்களைவிட சிறந்த தூதுவர் வேறு யாரும் நிச்சயமாக இருக்க முடியாது என்று நாம் நம்புகிறோம். திரு. வேணு சீனிவாசன் அவர்களின் அறிவார்ந்த வழிகாட்டுதலிலும், திரு. விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் போன்ற ஒரு தூதுவரின் துணையோடும் நம் அரசுப்பள்ளிகளை மேலும் வலுப்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டுள்ள நம்ம ஸ்கூல், நம்ம பள்ளி பவுண்டேஷனுக்கு நிதியுதவி செய்து, பிறருக்கு எடுத்துக்காட்டாக, ஆதரவளிக்க ஒவ்வொருவரும் முன்வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நம்புவது மட்டுமல்ல, அதற்கு தொடக்கமாக நானே முதல் நபராக எனது சொந்த நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் இந்தத் திட்டத்திற்காக நான் அளிக்கிறேன். நம்முடைய குழந்தைகளுடைய கல்விக்காக, பள்ளிகளின் வளர்ச்சிக்காகத்தான் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆகவே என்னுடைய அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பரந்த உள்ளத்தோடு தன்னுடைய பங்களிப்பினை வழங்குமாறு இந்த நிகழ்ச்சியின் மூலமாக அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

உங்கள் ஒவ்வொரு ரூபாயும் அரசு பள்ளிகளுக்கே செலவிடப்படும் என உறுதி கூறுகிறேன். நம் பிள்ளைகளின் கல்விக்கென உங்களிடம் நிதியுதவி வேண்டி நிற்கும் இந்தக் கோரிக்கையை ஏற்று நம் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்காக வாரி, வாரி வழங்கிடவேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்துவோம், நாம் காண விரும்பிய கனவுப் பள்ளியை நாம் உருவாக்குவோம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: