எய்ம்ஸ் சர்வர் மீது சைபர் தாக்குதல் ஹாங்காங்கில் இருந்து நடத்தப்பட்டது அம்பலம்: இன்டர்போலுக்கு சிபிஐ கடிதம்

புதுடெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக கூடுதல் விவரங்கள் பெற்றுத்தரக்கோரி இன்டர்போலுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரில் கடந்த நவம்பர் மாதம் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மருத்துவமனையின் அனைத்து ஆன்லைன் சேவைகளும் முழுமையாக செயலிழந்தன. இந்த தாக்குதல் குறித்து டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் வெளிநாட்டு சதி மற்றும் தீவிரவாத தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால் தேசிய சைபர் கிரைம் மற்றும் புலனாய்வுப் பிரிவு, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக மின்னஞ்சலின் ஐபி முகவரிகள் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து கூடுதல் விவரங்களை இன்டர்போலிடம் இருந்து பெற்று தருமாறு சிபிஐக்கு டெல்லி காவல்துறையின் உளவுத்துறை இணைவு மற்றும் வியூக நடவடிக்கை பிரிவு (ஐஎப் எஸ்ஓ) சிபிஐக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு சிபிஐ மூலமாக இன்டர்போலுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் சீன இணைய வழங்குநரிடமிருந்து சில தரவுகள் கோரப்பட்டுள்ளன. மேலும் ஹேக்கர்களிடம் இருந்து இரண்டு மின்னஞ்சல்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்ததால், அவர்களின் ஐபி முகவரிகளின் விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன. சைபர் தாக்குதல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையின் சில தரவுகள் முடங்கிவிட்டது. அந்த தரவுகளை மீட்டு எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தனர்.

Related Stories: