4 ஆண்டு இளங்கலை படிப்பில் சேரும் பட்டதாரிகள் நேரடியாக பிஎச்டி பட்டம் பெறலாம்

புதுடெல்லி: தேசிய கல்விக் கொள்கை பரிந்துரையின்படி, இளங்கலை படிப்புகளுக்கான புதிய மதிப்பெண் நடைமுறை மற்றும் பாடத்திட்ட கட்டமைப்பை யுஜிசி கடந்த வாரம் அறிவித்தது. இதன்படி, இளங்கலை ஹானர்ஸ் படிப்பு 3 ஆண்டுகளுக்கு பதில் 4 ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து பல்கலைக்கழகங்களும் ஹானர்ஸ் பட்டப்படிப்புகளுக்கு 4 ஆண்டு முறைக்கு மாறுவது கட்டாயமா என்பது குறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

தற்போதைய 3 ஆண்டு இளங்கலை ஹானர்ஸ் பட்டப்படிப்புகள் வழக்கம் போல் தொடரும். அதே சமயம், பல்கலைக்கழகங்கள் 4 ஆண்டு இளங்கலை பாடத்திட்ட கட்டமைப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

3 ஆண்டு திட்டங்களில் புதிய படிப்புகளையும் அறிமுகப்படுத்தலாம். 4 ஆண்டு பாடத்திட்டம் முழுமையாக செயல்படுத்தும் வரை, 3 ஆண்டு திட்டம் தொடரும். இதற்கான கால வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் விரைவில் 4 ஆண்டு பாடத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பல்வேறு நன்மைகள் உள்ளன. குறிப்பாக, 4 ஆண்டு இளங்கலை ஹானர்ஸ் படிப்பில் சேருபவர்கள், முனைவர் பட்டம் பெற விரும்பினால் கடைசி ஆண்டில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளலாம். இதன் மூலம் முதுகலை பட்டம் இல்லாமலேயே நேரடியாக பிஎச்டி பட்டம் பெற முடியும். மேலும் ஆழமான அறிவைப் பெற இரட்டை மேஜர் பாடங்களையும் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: