திருப்பத்தூர் மார்க்கெட்டில் 300 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் உள்ள மீன் மார்க்கெட்டில் இன்று அதிகாலை மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அழுகிய மற்றும் தரம் குறைான 300 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தம்பிபட்டி அருகே நெடுஞ்சாலை பகுதியில் மொத்த மீன் மார்க்கெட் உள்ளது.

இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் லாரிகளில் விற்பனைக்கு மீன்கள் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து மீன்களை வாங்கி, திருப்புத்தூர் நகர், காரைக்குடி, பொன்னமராவதி, புதுக்கோட்டை, திருமயம், கீழச்சிவல்பட்டி, சிங்கம்புணரி, மதகுபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சில்லறை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த மீன் மார்க்கெட்டில் மீன்வளத்துறை ஆய்வாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அதிரடியாக ஆய்வு செய்தனர். இதில் 3 கடைகளில் அழுகிய மற்றும் தரம் குறைந்த மீன்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த 300 கிலோ மீன்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் 3 கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு தரநிலைச் சட்டம் பிரிவு 55ன்படி எச்சரிக்கை நோட்டீஸ்ரீ வழங்கப்பட்டது. மேலும் அழுகிய மற்றும் தரம் குறைந்த மீன்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு அலுவலர்கள் அறிவுறுத்தினர். தொடர்ந்து பறிமுதல் செய்த 300 கிலோ மீன்களையும், பேரூராட்சி குப்பை கிடங்கில் பள்ளம் தோண்டி, கொட்டி அழிக்கப்பட்டது.

Related Stories: