ஐகோர்ட் நீதிபதி பரேஷ் உபாத்யாய் ஓய்வு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: நீதிபதிகள் எண்ணிக்கை 53 ஆக குறைவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரேஷ் உபாத்யாய் பணி ஓய்வு பெற்றதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி காலியிடங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி பரேஷ் உபாத்யாய் 1996ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கினார். 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் குஜராத் உயர் நீதிமன்ற கூடுதல் நியமிக்கப்பட்ட இவர் 2013ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். நேற்றுடன் அவருக்கு 62 வயது நிறைவடைந்ததையடுத்து நீதிபதி பரேஷ் உபாத்யாய் ஓய்வு பெற்றார்.

 இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆக குறைந்த நிலையில் காலி இடங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.  ஓய்வு பெற்ற நீதிபதிக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழாவில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் பேசினார். நிகழ்ச்சியில் ஏற்புரை நிகழ்த்திய நீதிபதி பரேஷ் உபாத்யாய், வாழ்க்கையின் பல பயணங்களில் ஒன்று தான் தாம் நீதிபதியாக இருந்து. அதிலும் தமிழகத்தில் நீதிபதியாக பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வழக்கில் கூட மொழி மாற்றம் செய்ய நான் கோரவில்லை. ஆசிரியர் வைத்து தமிழ் கற்றுக்கொண்டேன். அந்த ஆசிரியருக்கு ‘நன்றி அம்மா’ (தமிழில் கூறினார்).

ஒவ்வொரு ஏழைக்கும் நீதி கிடைப்பதற்காக எந்த அளவுக்கும் வளைந்து கொடுக்க தயாராக இருந்தேன் என்றார். இந்நிலையில், நீதிபதி பரேஷ் உபாத்யாய்க்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ் மீது நீங்கள் வைத்திருந்த பற்றுக்கு நன்றி. தமிழ் மொழியை கற்பதற்காக ஆசிரியரை நியமித்துள்ளது பெருமையாக உள்ளது. தங்களின் பணிக்காலத்தில் வழக்கறிஞர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களும் அதிக பலனை அடைந்துள்ளனர்.  தனி நபர் உரிமைக்கு தாங்கள் முக்கியத்துவம் அளித்து தீர்ப்புகளை வழங்கியுள்ளீர்கள். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்கள் பங்களிப்பு அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தங்களின் ஓய்வு காலத்தில் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறேன் என்றார்.

Related Stories: