மழையால் பாதிக்கப்பட்டுள்ள 45 இருளர்களுக்கு நிவாரணம்: சப்-கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் குடிசை வீடுகள் இடிந்து விழுந்தது. ஆடு, மாடுகள் உயிரிழந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்களின் குடிசை வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள், அரசின் தற்காலிக சிறப்பு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் அடுத்த  வெள்ளியூர் கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள 25 இருளர் இன குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, சப் கலெக்டர் ஏ.பி.மகாபாரதி நேரில் சென்று போர்வை,  பாய் பிஸ்கட், ரொட்டி மற்றும் சேமியா பாக்கெட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை வழங்கினார்.

அப்போது வட்டாட்சியர் என்.மதியழகன், ஒன்றிய கவுன்சிலர் டி.எம்.எஸ்.வேலு, துணைத் தலைவர் டி.முரளிகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் தினேஷ், கிராம நிர்வாக அலுவலர் ராதிகா, முனுசாமி மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்டோர் இருந்தனர்.

அம்மணம்பாக்கம் குறுவட்டம், செம்பேடு கிராமத்தில் கனமழையால் வாழ்வாதாரம் இழந்து தவித்துவரும் 20 இருளர் இன குடும்பங்களுக்கு சப் கலெக்டர் ஏ.பி.மகாபாரதி தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய், ரொட்டி, பிஸ்கெட்டுகளை வழங்கினார். இதில் வட்டாட்சியர் என்.மதியழகன், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் வனிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: