ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிடம் இருந்து நிதியுதவி: உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு புகார்..!

டெல்லி: ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு, சீனாவிடம் இருந்து ஏராளமான நிதிஉதவி கிடைத்துள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா புகார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுவதால், ‘தவாங் செக்டாரில் நடந்த மோதல் குறித்து விவாதிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இதனிடையே சீன - இந்திய எல்லையில் வீரர்களுக்கு இடையிலான மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்திற்கு வெளியே நிருபர்களிடம் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு, சீனாவிடம் இருந்து ஏராளமான நிதிஉதவி கிடைத்துள்ளது. அதனால், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் (எப்.சி.ஆர்.ஏ) அந்த அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து விவாதிக்க காங்கிரஸ் தயாராக இல்லை.

எல்லை பிரச்னைக்கு நேருவின் கொள்கையே காரணம். இந்தியாவின் ஒரு அங்குல நிலம் கூட சீனாவால் ஆக்கிரமிக்கப்படவில்லை. யாராலும் ஆக்கிரமிக்க முடியாது. இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர்களை, நமது வீரர்கள் விரட்டியடித்து நாட்டை பாதுகாத்தனர். அவர்களின் துணிச்சலை பாராட்டுகிறேன். இரு அவைகளிலும் தவாங் மோதல் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிப்பார் என்று, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால், கேள்வி நேரத்தை தொடர எதிர்கட்சிகள் அனுமதிக்கவில்லை’ என்று கூறினார்.

Related Stories: