நண்பரை கழுத்தறுத்துக் கொன்ற வழக்கில் இன்ஜி., கல்லூரி மாணவர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை-ஓசூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஓசூர் : ஓசூரில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவரை கழுத்தறுத்து படுகொலை செய்த வழக்கில், சக மாணவர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, ஓசூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.  சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் ராகவ்(23). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தனியார் கல்லூரியில் பொறியியல் ஆர்கிடெக் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

காமராஜ் காலனி 3வது கிராசில், அறை எடுத்து தங்கி படித்து வந்த ராகவ், கடந்த 5.6.2013 கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக, அப்போதைய ஓசூர் டிஎஸ்பி கோபி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில், அதே கல்லூரியில் படித்த ஈரோட்டைச் சேர்ந்த பிரவீன்குமார்(21), மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்த பிரணவ் சச்சின்(20) ஆகிய இருவரும் சேர்ந்து, ராகவை கொலை செய்ததும், வீட்டில் இருந்த 2 லேப்டாப் மற்றும் ஒரு செல்போனை எடுத்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

 மாணவர் ராகவ் தங்கியிருந்த அறைக்கு அவரது நண்பர்கள் பலர் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அவர்களில் ஒரு மாணவியை பிரவீன்குமார், விரும்பி உள்ளார். ஆனால், அந்த மாணவி பிரவீன்குமாருடன் இருந்த நட்பை கைவிட்டு, ராகவுடன் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், தனது நண்பர் பிரணவ் சச்சின் உதவியுடன் ராகவ் அறைக்கு நள்ளிரவில் சென்று, அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்து, 2 லேப்டப், செல்போனை திருடி சென்றது தெரியவந்தது.

இந்த வழக்கு, ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, குற்றம் சாட்டப்பட்ட பிரவீன்குமார், பிரணவ்சச்சின் ஆகிய 2 இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ₹1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சின்னபில்லப்பா ஆஜராகி வாதாடினார்.

Related Stories: