பக்தர்கள் வருகை அதிகரிப்பு; சபரிமலை கோயில் நடை 19 மணி நேரம் திறக்க நடவடிக்கை: பினராய் விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

திருவனந்தபுரம்: பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலையில் கோயில் நடையை 19 மணி நேரம் திறக்க நடவடிக்கை எடுப்பது என்று முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில்  தினமும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பக்தர்கள் 10 முதல் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். வரிசையில் பல மணி நேரம் காத்திருந்ததால் பல பக்தர்கள் மயக்கமடைந்தனர்.

இது தவிர கடும் நெரிசல் மூலம் சிலருக்கு காயமும் ஏற்பட்டது. நிலக்கல்- பம்பை இடையே கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. தொடர்ந்து சபரிமலையில் தரிசன நேரத்தை அதிகரிப்பது உள்பட பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சபரிமலை வரும் பக்தர்கள் ஒருவர் கூட தரிசனம் கிடைக்காமல் திரும்பும் நிலை இருக்கக்கூடாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும், கேரள போலீசுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் இரவு 11 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கு நடையை சாத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்றும் சபரிமலையில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்தனர்.

அதிகாலை 3 மணிக்கு நடை திறந்த போது 2 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசை காணப்பட்டது. இந்த நிலையில் சபரிமலையில் பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் நேற்று நடந்தது. கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தற்போது தினமும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதை 90 ஆயிரமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. தரிசன நேரத்தை 1 மணி நேரம் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது என்றும், நிலக்கல்லில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி தினமும் 19 மணி நேரம் கோயில் நடை திறந்திருக்கும்.

Related Stories: