வந்தவாசி அருகே நள்ளிரவு தனியார் பேருந்தில் தீ விபத்து: ஜன்னலை உடைத்து பயணிகள் உயிர் தப்பினர்

வந்தவாசி : வந்தவாசி அருகே நள்ளிரவு தனியார் பேருந்து தீ பிடித்து எரிந்ததால் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பயணிகள் உயிர்தப்பினர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து தனியார் பேருந்து மூலம் சென்றவர்கள் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கூட்டு சாலையில் பேருந்து சென்றபோது திடீரென பாலத்தின் மீது மோதி தீ பிடித்தது.

இதனால், பயணிகள் பதறியடித்து ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தனர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியேறிய போது காயமடைந்த இருவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திடீர் தீ விபத்து காரணமாக வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் 1கி.மீ தொலைவிற்கு வாகனங்கள் அணி வகுத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: