சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் மீனவ கிராமங்களில் 35 மீட்டர் கடல்நீர் புகுந்ததால் மக்கள் அச்சம்

சீர்காழி: வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த 9ம் தேதி இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரை கிராமங்களான பழையார், திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையார், பூம்புகார், வானகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் கடல் சீற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்தபோது அதிக உயரத்துடன் கடல் சீற்றம் இருந்ததால் சாவடிக்குப்பம், மடத்து குப்பம், புதுக்குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் 35 மீட்டர் நீளத்திற்கு கடல்நீர் புகுந்துள்ளது.

இதனால் மீனவ கிராமங்களில் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி இருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்ததோடு, மீன்பிடி தளம் மற்றும்  உலர் தளம் ஆகியவை கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடற்கரை பகுதியில் இருந்து மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளது. 50 அடி நீளத்திற்கு உட்புகுந்த கடல் நீர் இன்னும் வெளியேறாத நிலையில் கடல் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் மீனவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த மீனவ கிராமங்களில் சுமார் 350 மீட்டர் நீளத்திற்கு கடல் நீர் உட்புகுந்துள்ள நிலையில் தற்போது மேலும் 35 மீட்டர் கடல்நீர் புகுந்ததால், மீனவ கிராமங்களை முற்றிலும் அடித்து செல்லப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாவடிக்குப்பம், மடத்து குப்பம், புதுகுப்பம் பகுதிகளில் கடற்கரையில் கருங்கற்கள் கொட்டி கடல் அரிப்பை தடுக்க வேண்டும். பக்கிங்காம் கால்வாயை ஆழப்படுத்தி தூர்வார வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: