பொங்கல் பண்டிகையையொட்டி 15 வண்ணங்களில் சேலை, வேட்டி செய்யும் பணி தீவிரம்; கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தகவல்

திருப்பூர்:  திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், விசைத்தறி வேட்டி சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் முன்னேற்றம் குறித்து கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் திருச்செங்கோடு ஆகிய சரகங்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு கைத்தறி மற்றும் நுணிநூல் துறை அமைச்சர் காந்தி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசுகையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு தேவையான 1.70 கோடி வேட்டிகள் மற்றும் 1.77 கோடி சேலைகளில் இதுவரை 50 சதவீதம் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உற்பத்தியை வருகிற 10ம் தேதிக்குள் முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் நடக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை வழங்கப்பட்ட வேட்டி, சேலைகளில் மாறுதல் செய்யப்பட்டு, சேலைகளில் 15 புதிய வண்ணங்களிலும், வேட்டியில் கரை 1 அங்குலத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 1 லட்சம் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். மேலும், இந்த திட்டத்தின் மூலம் உபதொழிலில் 50 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர் என்றார்.

Related Stories: