அரசு ஆஸ்பத்திரியில் வாக்குமூலம் பெறச்சென்ற போது பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா...மாஜிஸ்திரேட்டிடம் கிண்டலடித்த நர்சுகள்: டீன் விசாரணை

சேலம்:  சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் விஷம் குடித்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவரிடம் சேலம் 1வது நீதித்துறை நடுவர், வாக்குமூலம் பெறுவதற்காக நேற்று மதியம் சென்றார். சிறுமி சிகிச்சை பெற்றுவரும் வார்டுக்கு சென்றபோது, அங்கிருந்த நர்சுகளிடம் டாக்டரை வரவழைக்குமாறு கூறினார். அப்போது அங்கிருந்த நர்சுகள் 2 பேர், ‘‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ என்று சினிமா வசனத்தை பேசி கிண்டலாக கூறியுள்ளனர். இதனை கேட்ட மாஜிஸ்திரேட், கடும் கோபம் அடைந்தார். பின்னர், சிறுமியை பார்த்து வாக்குமூலம் பெற்றார்.

அதன்பிறகு டீன் அலுவலகத்திற்கு சென்ற மாஜிஸ்திரேட், வாக்குமூலம் பெறச் சென்றபோது நர்சுகள் 2பேர் கிண்டலாக பேசியதாக புகார் தெரிவித்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். புதியதாக பொறுப்பேற்றுள்ள டீன் மணி, சம்பந்தப்பட்ட 2 நர்சுகளையும் வரவழைத்து விசாரணை நடத்தினார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நர்சுகள் சங்க நிர்வாகிகளும் விரைந்து சென்றனர். அப்போது, மாஜிஸ்திரேட்டிடம் நர்சுகள், தெரியாமல் பேசிவிட்டதாக மன்னிப்பு கேட்டனர். அதே நேரத்தில் நீதித்துறை நடுவரை கேலி பேசிய 2 நர்சுகளுக்கும் மெமோ கொடுத்து விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் அரசு மருத்துவமனையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: