மாண்டஸ் புயல் காரணமாக மாமல்லபுரம், பழவேற்காடு காசிமேட்டில் கடல் சீற்றம்

சென்னை: வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவு முதல் அதிகாலைக்குள் கரையை கடக்கும். அந்நேரத்தில் 60 முதல் 80 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, மாமல்லபுரம், கல்பாக்கம் உள்பட பல்வேறு மீனவகுப்பம் பகுதிகளில் இன்று 2வது நாளாக பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் கரையை நோக்கி பெரும் சீற்றத்துடன் அலைகள் வேகமாக வந்து மோதின. 10 அடி உயரத்துக்கு அலை எழுந்ததால் காலையில் நடைபயிற்சிக்கு சென்ற உள்ளூர் மக்களை போலீசார், தீயணைப்பு படையினர் திருப்பி அனுப்பினர்.

இதேபோல் வெண்புருஷம் குப்பம், கொக்கிலமேடு குப்பம், தேவனேரி, சாலவான்குப்பம், புதுஎடையூர் குப்பம், பட்டிப்புலம் குப்பம், சூளேரிக்காடு குப்பம், புதிய கல்பாக்கம் குப்பம், நெம்மேலி குப்பம், திருவிடந்தை, செம்மஞ்சேரி குப்பம் வரை கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் கரையை ஒட்டியுள்ள மீனவ குப்பங்களில் உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்துள்ளது.

மாமல்லபுரத்தை பொறுத்தவரை மணிக்கு 30 கிமீ வேகத்தில் காற்று வீசுவதுடன், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து, மாண்டஸ் புயல் பாதுகாப்பு பணியில் 100 சதவீதம் அனைத்து உபகரணங்களுடன் பேரூராட்சி ஊழியர்கள் தயார்நிலையில் உள்ளனர் என மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி யஸ்வந்த்ராவ் தெரிவித்தார். மேலும், கட்டுமான பகுதிகளில் உள்ள இரும்பு தகடுகள் போன்றவற்றை பாதுகாப்பான இடங்களில் வைக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். சென்னை வானிலை மையத்திடம் இருந்து அதிகாரபூர்வமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

நேற்றிரவு மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு செல்லும் சாலையோரம் இருந்த பெரிய காட்டுவா மரம் பலத்த சூறைக்காற்றினால் முறிந்து விழுந்தது. உடனே அவற்றை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர். மேலும், பல்வேறு இடங்களில் மீட்பு பணிக்காக 10க்கும் மேற்பட்ட புயல் பாதுகாப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

 

பொன்னேரி: மாண்டஸ் புயல் காரணமாக பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் பலத்த தரைக்காற்று வீசியது. 10 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்ததால் பழவேற்காடு-காட்டுப்பள்ளி தரைமட்ட சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். காட்டுப்பள்ளி, காலாஞ்சி, பழவேற்காடு உள்பட கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களை இன்று காலை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், வருவாய்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தனர்.

தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1000க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்வது வழக்கம். புயல் காரணமாக காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை. விசைப்படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் கட்டி வைத்துள்ளனர். சிறிய படகுகளை கிரேன் மூலம் கரைக்கு தூக்கி பாதுகாப்பாக  வைத்துள்ளனர். புயல் காரணமாக காசிமேட்டில் 10 அடி உயரத்துக்கு கடல் சீற்றம் காணப்பட்டது. அதனால் கடற்கரைக்கு யாரும் செல்லக்கூடாது என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.  காசிமேடு கடற்கரை பகுதியில் பலத்த காற்றும், விட்டுவிட்டு பலத்த மழையும் பெய்து வருகிறது.

Related Stories: