நான்தான் பரோட்டா மாஸ்டர்; நீயாவது படித்து முன்னேறு என்ற தந்தையின் அறிவுரையால் மனமுடைந்த பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை: வேளச்சேரி அருகே சோகம்

வேளச்சேரி: நான்தான் பரோட்டா மாஸ்டர்; நீயாவது படித்து முன்னேறு என்ற தந்தையின் அறிவுரையால் மனமுடைந்த மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். வேளச்சேரி அருகே நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி அருகே சித்தாலப்பாக்கம், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் முருகன். இவர், பொன்மாரில் சாலையோர டிபன் கடையில் பரோட்டா மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார்.

இவரது மகன் சுதீப் (15). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன் முருகனுக்கும் அவரது மனைவி கவுசல்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தகராறு முற்றியதில், கவுசல்யா கோபித்து கொண்டு தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மகனுடன் முருகன் தனியாக இருந்தார். மனைவி பிரிந்த ஏக்கத்தில் முருகன் மது அருந்த தொடங்கினார். மேலும் வேலைக்கு செல்லாமல் வீட்டுக்குள் முடங்கினார். இது சுதீப்புக்கு கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை பள்ளியில் இருந்து சுதீப் வீடு திரும்பினான். அவனிடம், ‘நான் சரியாக படிக்காததால், சாலையோர டிபன் கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்க்கிறேன். நீயாவது ஊர் சுற்றாமல் படித்து முன்னேறு’ என தந்தை முருகன் குடிபோதையில் அறிவுரை கூறியுள்ளார். இதில் மனமுடைந்த சுதீப், அறைக்குள் கதவை தாழிட்டு, மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரமாக கதவை திறக்காததால் உடைத்து பார்த்தபோது, தூக்கில் தொங்கியதை பார்த்து முருகன் கதறி அழுதார்.

தகவலறிந்து பெரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுதீப்பின் சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவன் இறப்பில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: