நீர்த்தேக்கத்தில் 20 அடி வரை வண்டல் மண் படிவம் வைகை அணை தூர்வாரப்பட வேண்டும்

*தேங்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும்

*தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

ஆண்டிபட்டி :ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்த்தேக்கத்தில் 20 அடிக்கும் மேல் வண்டல் மண் படிவங்கள்  மற்றும் சேரும் படிந்துள்ளதால் கோடை காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அணையை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பெய்து வரும் மழைநீர் மற்றும் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆற்றின் வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை தேக்கி வைத்து முறையாக குடிநீருக்கும், பாசனத்திற்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 1959ம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை கட்டப்பட்டது. இந்த வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ள 5 மாவட்டம் மக்களின் விவசாய பாசனத்திற்கும், குடிநீருக்கும் விளங்கி வருகிறது. 111 அடி உயரம் கொண்ட அந்த வைகை அணையில் 71 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தமிழகத்தில் கடலில் நேரடியாக கலக்காத ஒரே ஆறு வைகை ஆறு.

வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்தாண்டு தொடக்கத்தின் முதலே அடிக்கடி பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு மேலே உயர்ந்தே காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வைகை அணை இந்த ஆண்டு இரண்டு முறை முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துவிட்ட நிலையில் அணைக்கு  நீர்வரத்து குறைந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர் வரத்து குறைந்ததாலும், அணையில் இருந்து பாசனத்திற்கு அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக குறைய தொடங்கியது.

வைகை அணை கட்டிய காலம் முதல் தூர்வாரப்படவில்லை. அணை தூர்வாரப்படாத காரணத்தால் வைகை அணை நீர்தேக்க பகுதிக்குள் 15 முதல் 20 அடி வரை வண்டல் மண் படிந்துள்ளது. இதனால் வைகை அணையில் தேங்கும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. வைகை அணையை தூர்வார வேண்டும் என தேனி மாவட்டம் உள்பட 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் அணையை தூர்வாருவதற்க்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

‘எக்கோ சவுண்டர்’ மூலம் ஆய்வு

பொதுப்பணித்துறையினர் நீர்தேக்கம் பகுதிக்குள் படகில் சென்று ‘எக்கோ சவுண்டர்’ என்னும் கருவியின் உதவியுடன் வண்டல் மண் படிவங்கள் தேக்கம் குறித்து ஆய்வு நடத்தினர். அதன் பின்னர் அணையில் தேங்கியுள்ள வண்டல் மண் படிவத்தை தூர்வாருவதற்கான மதிப்பீடு பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்றது. மொத்த வைகை அணையை தூர்வார சுமார் 800 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்த தொகையை கொண்டு புதிய அணையை கட்டிவிடலாம் என்பதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும் விவசாயிகள் வைகை அணையை தூர்வார வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

183 கோடியில் திட்ட அறிக்கை

இதனையடுத்து அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வைகை அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அணையை தூர்வார அதிகமான நிதி தேவைப்படும் என்பதாலும், தூர்வாரப்படும் வண்டல் மண்ணை ஒரே நேரத்தில் அப்புறப்படுத்துவது சிரமம் என்பதாலும் வைகை அணையை 4 கட்டமாக தூர்வார திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக அணையின் ஒரு பகுதியை தூர்வார விரிவான திட்டமதிப்பீடு தயார் செய்யும் பணியில் சில மாதங்களாக பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். 183 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த நிதியின் மூலம் அணையின் 10 மில்லியன் கனமீட்டர் பரப்பளவு தூர்வாரப்படும் என தெரியவந்தது.

4,500 விவசாயிகள் சம்மதம்

அணை பயன்பாட்டிற்கு வந்த போது அணையின் ஆழம் எந்த அளவற்கு இருந்ததோ, அதே அளவிற்கு தூர்வாரவும் முடிவு செய்யப்பட்டது. தூர்வாரும் போது அள்ளப்படும் வண்டல் மண்களை வைகை அணையை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் கொட்டிக் கொள்ள விவாசயிகள் ஒப்புதல் அளித்தனர். இதற்காக அணையை சுற்றியுள்ள 4,500 விவசாயிகள் வண்டல் மண்ணை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்து பொதுப்பணித்துறையினரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

அதன்படி வைகை அணையில் அள்ளப்படும் நிலம், சம்மதம் தெரிவித்துள்ள விவசாயிகளின் நிலத்தில் ஒரு அடி உயரத்திற்கு வண்டல் மண்ணை கொட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான மதிப்பீடு பட்டியல் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக அரசு  அணையை தூர்வாரும் திட்டத்தை வெறும் திட்ட வடிவிலேயே வைத்தனர்.

தண்ணீர் பஞ்சத்திற்கு வாய்ப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘வைகை அணையை தூர்வார கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அணையை தூர்வாரும் திட்டம் கிடப்பிலேயே போடப்பட்டது. மேலும் தற்போது அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு மேல் இருந்தாலும் 20 அடி வரை வண்டல் மண்ணும், சேறும் படிந்துள்ளது. வைகை அணை தூர்வாரப்படாததால் கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அணையை தூர்வார தற்போதைய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: