டேன்டீ தொழிலாளி வீட்டை சூறையாடிய காட்டு யானை

பந்தலூர் :  பந்தலூர் அருகே தேவாலா டேன்டீ பகுதியில் தொழிலாளியின் வீட்டை இடித்து சூறையாடி அட்டகாசம் செய்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் பொதுமக்களின் குடியிருப்புகளை இடித்து சேதம் செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வனங்களில் இருந்து வெளியேறும் யானைகள், உணவு தேடி குடியிருப்புக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று, சுவைத்து சேதம் செய்வதால் அவ்வப்போது மனித - யானை மோதல்கள் ஏற்பட்டு மனித  உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் தேவாலா வாளவயல் பகுதியில் வீட்டை இடித்து மூதாட்டியை கொன்ற அரிசி ராஜா என்கிற மக்னா யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு தேயிலைத்தோட்டம் தேவாலா டேன்டீ சரகம் 3 பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் புகுந்த காட்டு யானை ஒன்று, காளிமுத்து என்ற டேன் டீ தொழிலாளியின் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவை இடித்து சூறையாடி தும்பிக்கையால் வீட்டில் இருந்த அரிசியை மூட்டையை இழுத்து வெளியில் போட்டு சேதம்

செய்தது.

வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் யானை சற்று நேரத்தில் அங்கிருந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.தொடர்ந்து காட்டு யானைகளிடமிருந்து பொதுமக்களுக்கும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

யானை தாக்கியதில் தொழிலாளி கால் முறிவு

அரசு தேயிலை தோட்டம் டேன்டீ சரகம் 4 பகுதியில் நேற்று காலை கூலித்தொழிலாளி முனுசாமி என்கிற மோகனதாசு (50) என்பவர் அப்பகுதியில் பைப்லைன் திறக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, வனப்பகுதிக்குள் இருந்து தேயிலை தோட்டப்பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று, முனுசாமியை தாக்கியதில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். இருப்பினும், யானை தாக்குதலில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவரை ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: