இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்கள்; இந்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

டெல்லி: இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, நேற்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவை நேரமில்லா நேரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., உரையாற்றினார். அப்போது; அவைத் தலைவர் அவர்களே, தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை உங்கள் மூலம் சபையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். கடந்த 45 ஆண்டுகளாக, 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கி, அவர்களின் படகுகளை சேதப்படுத்தப்படுத்துகின்றனர். மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்துகிறார்கள்.

அண்மைக்காலமாக படகுகளை கைப்பற்றி, ஏலத்தில் விட்டுவிடுகின்றனர். இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு எதுவும் வழங்கவில்லை. இதைக் கண்டித்து தமிழக மீனவர்கள் தொடர்ந்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தி வருகின்றன. பாக் வளைகுடாவில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப் பறிக்கும் வகையில், துப்பாக்கிச் சூடு நடத்தி, அவர்களின் படகுகளைக் கைப்பற்றி, சேதப்படுத்துவது இலங்கைக் கடற்படையின் தொடர் கதையாக இருக்கிறது.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மீனவர்களையும், அவர்களது படகுகளையும்  விடுவிக்க இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையை இந்திய அரசு பெற்றுத் தர வேண்டும். இலங்கை கடற்படையினரின் இந்த இடைவிடாத துன்புறுத்தலுக்கு நிரந்தர தீர்வு காண இலங்கை அரசுடன் இந்தியா உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.

Related Stories: