நெருங்கும் மாண்டஸ் புயல்; தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் இரவு தீவிர புயலாக மாறியது. சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ., காரைக்காலில் இருந்து கிழக்கு தென் கிழக்கே 200 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. அடுத்து 3 மணி நேரத்தில் தீவிர புயல் என்ற நிலையில் இருந்து புயலாக மாண்டஸ் வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாமல்லபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: