300 பேர் வாட்ஸ் அப் குழு அமைத்து 14000 பேரை விபசாரத்தில் தள்ளிய கும்பல்: தெலங்கானாவில் போதைக்கு அடிமையாக்கி கொடூரம்

திருமலை: வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி அதன்மூலம் வறுமையில் வாடும் பெண்கள், சிறுமிகளிடம் ஆசைவார்த்தை கூறி போதைக்கு அடிமையாக்கி விபச்சாரத்தில் தள்ளிய 17 பேர் கும்பல் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து வெளிநாடு, வெளிமாநிலங்களை சேர்ந்த 14,190 பெண்கள், சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

தெலங்கானா மாநில சைபராபாத் போலீசார் பாலியல் தொழில் மற்றும் ஆள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஆள் கடத்தல் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பேகம்பேட்டை பிரகாஷ்நகரை சேர்ந்த சல்மான் என்கிற விவேக்(23), சன்சிட்டியை சேர்ந்த இர்பான் என்கிற விகாஸ்(36) ஆகிய 2 பேரை  கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் முக்கிய குற்றவாளிகளான அர்னவ், சமீர், ஹர்பிந்தர்கவுர் ஆகிய 3பேரையும் அதிரடியாக கைது

செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து ஆணையர் ஸ்டீபன்ரவீந்திரா நேற்று கூறியதாவது: ஐதராபாத் மசாப் டேங்கை சேர்ந்தவர் முகமதுஅதீம் என்கிற அர்னாப்(31). டோலிச்சவுகியை சேர்ந்தவர் முகமதுசமீர்(27). இவர்கள் கடந்த 2019ம் ஆண்டு பாலியல் தொழில் தொடங்கியுள்ளனர். இதற்காக 15 பேரை தங்களுடன் சேர்த்துக்கொண்டுள்ளனர். இவர்கள் பல்வேறு மாநிலங்களில் புரோக்கர்களை நியமித்து கமிஷன் கொடுத்து சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். இதற்காக பல்வேறு நகரங்களில் கால் சென்டர் தொடங்கியுள்ளனர். மேலும் வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி இவற்றில் தலா 300 பேரை சேர்த்துள்ளனர். இவர்கள் வறுமையில் வாடும் பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் வேலை வாங்கி தருவதாக கூறுவார்கள்.

இதை உண்மை என நம்பும் பெண்களை புகைப்படம் எடுத்துக்கொண்டு அவற்றை ‘வாட்ஸ்அப்’ குழு மூலமாக அனுப்புவார்கள். அவற்றை பார்க்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பெண்களை தேர்ந்தெடுத்து இதற்காக அமைக்கப்பட்ட கால் சென்டர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். கால் சென்டர் ஊழியர்கள் குறிப்பிட்ட தங்கும் விடுதியில் விபசார அழகி இருப்பார் என்றும், அவருக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி ஒரு தொகையை ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்வார்கள். அந்த பணத்தில் 30 சதவீதம் விபசாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்கும், 35 சதவீதம் அந்தப்பெண்களின் படங்களை விளம்பரம் செய்பவர்களுக்கும் கால்சென்டர் பிரதிநிதிகளுக்கும் கொடுப்பார்கள். மீதி 35 சதவீத பணத்தை நிர்வாகிகள் பங்கிட்டு கொள்வார்கள்.

விபசாரத்திற்கு பெண்களை கேட்கும் ஆண்களுடன் பேசுவதற்காக நிர்வாகிகள் ஐதராபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் கால் சென்டர்களை ஏற்பாடு செய்துள்ளனர். ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்காளம், கர்நாடகா, மராட்டியம், டெல்லி, கொல்கத்தா, அசாம் மாநில பெண்களை மட்டுமின்றி தாய்லாந்து, நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான், ரஷிய நாட்டு பெண்களையும் இவர்கள் விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.

வெளிநாட்டு பெண்களுக்கு போலி பாஸ்போர்ட்டுகள் ஆதார் கார்டுகளை தயாரித்து இவர்களை இந்தியா முழுவதிலும் உள்ள நகரங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாதித்த பெண்களில் 50 சதவீதம் பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். 20 சதவீதம் பேர் கர்நாடகா, 15 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, 7 சதவீதம் பேர் டெல்லி, 5 சதவீதம் பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள், 3 சதவீதம் பேர் வெளிநாட்டினர்.

தங்களிடம் சிக்கிய பெண்களுக்கு போதை மருந்து உட்கொள்ள செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஹர்பிந்தர் கவுர் என்ற பெண் முக்கிய குற்றவாளியான அர்னவுக்கு உதவி செய்துள்ளார். டோலிச்சோக்கியை சேர்ந்த குட்டு அலிசம் என்பவரின் உதவியுடன் போதை பொருள் வியாபாரி சோபின் படேல் என்கிற அப்பாஸ் என்பவரிடம் இருந்து போதை மருந்துகளை அர்னவ் வாங்கி இவற்றை பெண்களிடம் விற்றும் பணம் சம்பாதித்துள்ளார்.

இதுதொடர்பாக, மொத்தம் 17 பேர் தனித்தனியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 39 வழக்குகள் உள்ளது. அவர்களிடம் இருந்து ₹95 ஆயிரம் ரொக்கம், 34 செல்போன்கள், 3 கார்கள், ஒரு லேப்டாப், ஏடிஎம் கார்டுகள், 2.5 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பலிடம் சிக்கிய 14,190 பெண்கள், சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: