‘காலையில் தூங்கி எழுந்து பார்த்தால் அதிர்ஷ்டமாம்...’தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த அபூர்வ வகை நரிகள் பறிமுதல்: கோட்டீஸ்வரர் ஆசைகாட்டி விற்க முயற்சி; சென்னை விமான நிலையத்தில் பயணி சிக்கினார்

சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த சகாரா பாலைவன அபூர்வ வகை நரிகளை  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூங்கி எழுந்தவுடன் அந்த நரியை பார்த்தால் அதிர்ஷ்டம் கொட்டும் என்று ஆசைவார்த்தை கூறி, பல லட்சத்துக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த ஒரு பயணி பெரிய பிளாஸ்டிக் கூடை ஒன்றை எடுத்து வந்திருந்தார். சுங்க அதிகாரிகள் அந்த பயணியை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடையை சோதனை செய்தபோது, அபூர்வ வகை 2 நரிகுட்டிகள் இருந்தன.

இந்த நரி குட்டிகள் வடஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பெனின்சுலா பகுதிகளிலும், மேற்கு சகாரா பாலைவனப் பகுதிகளிலும் வசிப்பவையாகும். இவை மிகவும் அபூர்வமானவை. இதை பென்னஷ் பாக்ஸ் என்ற பாலைவன நரி என்று கூறுவர். சுங்க அதிகாரிகள் அந்த பாலைவன நரி குட்டிகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இந்த நரியை காலையில் தூங்கி எழுந்ததும் பார்த்தால், அன்று நாள் முழுவதும் மிகுந்த அதிர்ஷ்டமாக இருக்கும். நினைத்த   செயல்கள் அனைத்தும், வெற்றிகரமாக நடக்கும். எனவே இதை மிகப்பெரிய செல்வந்தர்கள், கோடீஸ்வரர்கள் பல லட்சம் பணம் கொடுத்து வாங்குவார்கள்.

எனவே, இதை நான் பாலைவன பகுதியில் இருந்து மிகக்குறைந்த விலையில் வாங்கி வந்திருக்கிறேன் என்று கூறினார். இதை யார் வாங்க இருக்கிறார்கள் என்று கேட்டபோது, அதற்கான பதிலை அவர் கூறவில்லை. விலங்குகள் பற்றிய எந்த சான்றும் அவரிடம் இல்லை. இதையடுத்து உடனடியாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வன குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் நரி குட்டிகளை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது. உடனடியாக  எந்த நாட்டில் இருந்து வந்ததோ, அங்கேயே திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர். இதையடுத்து தாய் ஏர்லைன்சில் நரிகள் திரும்பி சென்றது. அதற்கான செலவை, பாலைவன நரி குட்டிகளை, கடத்தி வந்த பயணியிடம் வசூலித்தனர். அதோடு, அந்த பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

Related Stories: