டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி: பாஜ.வின் 15 ஆண்டு ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் 134 இடங்களில் வார்டுகளில் அமோக  வெற்றி பெற்று, ஆம் ஆத்மி முதல் முறையாக   அதிகாரத்தை பிடித்துள்ளது.  இதன்மூலம், பாஜவின் 15 ஆண்டு கால ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி  வைக்கப்பட்டு உள்ளது.   

டெல்லி  மாநகராட்சியில் 2017ம் ஆண்டு நடந்த  தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களின் பதவிக் காலம் முடிந்தும், 8 மாத  தாமதத்திற்கு பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த  டிசம்பர் 4ம் தேதி டெல்லி மாநகராட்சிக்கு வாக்கு பதிவு நடைபெற்றது. இதில்,  50.48 சதவீத வாக்குகள் பதிவாகின.

பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு  சாதனங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு 42 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.  திட்டமிட்டபடி நேற்று காலை 8  மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து  கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என கணிக்கப்பட்டு இருந்தது.  அதனை மெய்பிக்கும் வகையில் ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான  வார்டுகளில் முன்னிலை பெற்றது. மொத்தமுள்ள 250 வார்டுகளில்  பெரும்பான்மைக்கு தேவையான 126 இடங்களை கடந்து ஒட்டு மொத்தமாக 134  வார்டுகளில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அடுத்த இடத்தில் பாஜ 104  இடங்களிலும், காங்கிரஸ் 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. பிற கட்சிகள்  மற்றும் சுயேச்சைகள் மூன்று வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆம்  ஆத்மியின் வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள்  வழங்கியும், ஆடியும் பாடியும் ஆர்ப்பட்டமாக கொண்டாடினர். 15 ஆண்டுகள்  மாநகராட்சியை ஆட்சி செய்து, மக்கள் அதிருப்தியை பெற்றிருந்த போதிலும் பாஜ  104 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த முறையை விட காங்கிரஸ் குறைந்த இடங்களே  பெற்றதால், அக்கட்சி அலுவலகம் கொண்டாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. முதன்முறையாக பா.ஜ வசம் இருந்த மாநகராட்சியை ஆம்ஆத்மி கைப்பற்றி தேர்தலில் வீழ்த்தி உள்ளது.

Related Stories: