களக்காடு அருகே மலையடிப்புதூரில் தேன் உற்பத்தியில் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் ஈட்டும் வாலிபர்

களக்காடு: களக்காடு அருகே மலையடிப்புதூரைச் சேர்ந்த இளைஞர் தேன் உற்பத்தியில் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருகிறார். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மலையடிப் புதூரைச்  சேர்ந்தவர் இசக்கிமுத்து (24). டிப்ளமோவில் விவசாய பட்டப்படிப்பை முடித்த இவர் கடந்த 4 ஆண்டுகளாக மலையடிப்புதூரில் தேன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் தமிழகம் முழுவதும் தேன் உற்பத்தி தொழிலை விரிவுபடுத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக தந்தை சேர்மத்துரை, தாய் கமலா ஆகியோரும் தேனி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேனீக்கள் என்றால் கொட்டும் என்ற அதீத பயத்தைப் போக்கும் வகையில் தனது முகம் முழுவதும் தேனீக்களை பரவ விட்டு மக்கள் மத்தியில் விநோத விழிப்புணர்வை இசக்கிமுத்து மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தேனீக்கள் வளர்ப்பில் ஆண்டொன்றுக்கு ரூ.பல லட்சம் வருமானத்தை பெறலாம் என்பதை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறார். இதை முழுமையாக ஆராய்ந்து செயல்பட்டால் தமிழகத்தில் விவசாயத் துறை கல்வியில் தேர்ச்சிபெற்ற இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும்  இத்தொழிலுக்கு மாறும் நிலை உருவாகும்.

இதுகுறித்து இசக்கிமுத்து கூறுகையில் ‘‘தேனீக்கள் நம்முடன் இயற்கையாக வளர்ந்து வரும் உயிரினம் தேனீக்கள் என்றால் கொட்டும் என்பது பொதுவான கருத்து. தேனீக்களை கண்டு பயப்படத் தேவையில்லை. சாதாரணமாக வீட்டில் வளர்க்கலாம். பயத்தை போக்குவதற்காக மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் முகம் முழுவதும் பரவ விட்டு அதன் மூலம் பயத்தை நீக்கும் முயற்சியை செய்து வருகிறேன். அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதத்தில் இரு நாட்கள் தேனீக்கள் வளர்ப்பு குறித்து பயிற்சி நடத்தி வழிகாட்டுகிறேன். தேனீக்கள் விவசாயத்துடன் ஒன்றுபட்டது. தேனீக்களால் 60% மகரந்தச் சேர்க்கை உருவாகி இயற்கையின் விவசாயமாக காய்கறிகள் பழங்கள் கிடைக்கிறது.

வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தி கிடைக்கும் விவசாய உற்பத்தியால் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. வீடுகள் தோறும் தேனீக்கள் வளர்ப்பதற்கான கூண்டுகளை விற்பனை செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளேன். இவ்வாறு தேன் உற்பத்தி மூலம் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறேன்.

டிப்ளமோவில் விவசாய கல்வியில் பல்வேறு தொழில்களுக்கு மத்தியில் தேனீக்கள் வளர்த்து லாபம் பெற்று வரும் என்னைப் போன்ற இளைஞர்கள் இத்தொழில் மீது அக்கறை கொண்டு தேனீக்களின் மீதான பயம் இருக்க வேண்டாம் என்று எனது விழிப்புணர்வை தொடர்ந்து நடத்தி வருகிறேன். தேனீக்கள் வளர்ப்பால்  விவசாயம் செழிப்பாகும் என்பதாலும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பதாலும் இத்தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன்’’ என்றார்.

Related Stories: