8 வயது சிறுமிக்கு பாலியல் டார்ச்சர்: கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

ஊட்டி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் பாலன் (53). இவர் கடந்த 2018ம் ஆண்டு தனது வீட்டிற்கு வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததுடன் இதுகுறித்து வெளியில் தெரிவிக்கக்கூடாது எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார். இந்த நிலையில், சிறுமியின் உடல் மற்றும் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை உணர்ந்த பெற்றோர் விசாரித்தபோது சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார்.

இதுசம்பந்தமாக பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், தேவாலா அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து பாலனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று நீதிபதி அளித்த தீர்ப்பில், ‘’பாலன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்படுகிறது’ என்று நீதிபதி நாராயணன் கூறினார். மேலும் பாலனின் மனைவி உடல் நிலை பாதிக்கப்பட்டு நடமாட முடியாத நிலையில், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கவும் அரசு திட்டங்கள் அல்லது தனியார் அமைப்புகள் பொருளாதார ரீதியான உதவிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: