பழவேற்காட்டில் மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு; தலைமறைவாக இருந்த சிறுவன் உட்பட 2 பேர் கைது: தனிப்படை போலீஸ் அதிரடி

பொன்னேரி: பழவேற்காடு பகுதியில் முன்விரோதம் காரணமாக  மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில், சிறுவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொன்னேரி அடுத்த பழவேற்காடு பெரிய தெருவில் வசித்து வருபவர் மகிமை தாஸ் (59). மீன், இறால் ஏற்றுமதி  செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த நவம்பர் 30ம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதனால் தீப்பிடித்து எரிந்ததில் பைக், கார் சேதானது.

இதுகுறித்து மகிமைதாஸ் கொடுத்த புகாரின்பேரில், திருப்பாலைவனம் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதையடுத்து, திருவள்ளூர் எஸ்பி கல்யாண் உத்தவுபடி பொன்னேரி டிஎஸ்பி கிரியா சக்தி (பொறுப்பு) மேற்பார்வையில் திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையில் எஸ்ஐக்கள் மகாலிங்கம், குமணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்தனர். மகிமைதாஸ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்து இருந்ததால் அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதில்  பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், பொன்னேரி மெதூர்  பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த கார்த்திக் (26) கார்த்திக்கின் தம்பி விக்கி (22) என்பதும், இவர்களுக்கு உடந்தையாக சென்னை பெரம்பூரை சேர்ந்த உறவினரின் மகன் 15 வயது சிறுவன் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று சென்னையில் பதுங்கியிருந்த கார்த்திக், சிறுவனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கார்த்திக்கின் தம்பி விக்கி தப்பி ஓடிவிட்டார். பின்னர், இருவரையும் திருப்பாலைவனம் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், விக்கி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழவேற்காடு பகுதியில் மகிமைதாசிடம் வேன் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.

திடீரென விக்கியை வேலையில் இருந்து நீக்கிய மகிமைதாஸ் சம்பளமும் கொடுக்கவில்லையாம். இதனால் கோபமடைந்த விக்கி, செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி மகிமைதாசை மிரட்டிள்ளார். இதனால் விக்கிக்கும், மகிமைதாசுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வேலையில்  இருந்து நீக்கி சம்பளமும் தராத மகிமைதாஸ் குடும்பத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தவேண்டும் என நினைத்த விக்கி, தனது அண்ணன் கார்த்திக்கிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

இதையடுத்து, சென்னையில் வசிக்கும் உறவினரிடம் ஆலோசனைபடி மகிமைதாஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு தயாரித்து வீசியது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவனை சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தலைமறைவாக இருக்கும் விக்கியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: