நெல்லை, தென்காசியில் மேகமூட்டத்தோடு தொடரும் மழை

*காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு

நெல்லை :  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி பெய்து வருகிறது. வடமாவட்டங்களில் எதிர்பார்த்த மழை காணப்பட்டாலும், தென்மாவட்டங்களில் இன்று வரை வடகிழக்கு பருவமழை பூச்சாண்டி காட்டி வருகிறது. மழைக்காலத்திற்கான அனைத்து அறிகுறிகளும் காணப்பட்டாலும், குறிப்பிட்ட பகுதியில் பெயரளவுக்கு மட்டுமே மழை பெய்வதால், கிராமங்களில் உள்ள குளங்கள், குட்டைகள் நிரம்புவதில் சிக்கல் நீடிக்கிறது.

கடந்த ஒரு வாரமாக வானம் மேக மூட்டமாக காணப்படுவதோடு, ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பரவலாக மழையும் பெய்து வருகிறது. நெல்லை, பாளையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சுமார் அரை மணி நேரம் நல்ல மழை காணப்பட்டது, அவ்வப்போது தூறலும் நிலவியது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம்: பாளையங்கோட்டை 7 மிமீ, மணிமுத்தாறு- 5.2, நெல்லை 4.8, பாபநாசம்-8, சேர்வலாறு- 1, கன்னடியன் அணைக்கட்டு- 1, களக்காடு- 6.8, மூலக்கரைப்பட்டி- 4 மிமீ, கொடுமுடியாறு 33 மிமீ, நம்பியாறு 29 மிமீ மழை, மாஞ்சோலை 14, காக்காச்சி 13, நாலுமுக்கு 29, ஊத்து 21 மிமீ மழை பெய்துள்ளது. தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலை 7 மணி நிலவரப்படி தென்காசி 5 மி.மீ, கடனா-18 மி.மீ, ராமநதி-8 மி.மீ, குண்டாறு-2 மி.மீ, சிவகிரி 1, அடவிநயினார்- 11 மிமீ மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட நேற்று மழை அளவு பதிவாகவில்லை.

நெல்லை, தென்காசியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளில் நீர்மட்டமும் மெல்ல அதிகரித்து வருகிறது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 3 அடி உயர்ந்து 107.81 அடியை எட்டியுள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 96.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2412.48 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 406 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து நேற்று 86.10 அடியாக உள்ளது.

அணைக்கு 2637 கனஅடி நீர் வரும் நிலையில் 35 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 15.25 அடியாகவும், 22.96 அடி கொள்ளளவு கொண்ட நம்பியாறு அணை நீர்மட்டம் 15.58 அடியாகவும், 52.25 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 31.50 அடியாக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் நீர்மட்டம் நேற்று 1 அடி உயர்ந்து 78 அடியாக உயர்ந்தது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 62 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 62.01 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 30 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பியதால் அணைக்கு வரும் 15 கனஅடி நீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. 132.22 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 80.75 அடியாக உள்ளது.

பாபநாசம் அணைப்பகுதியில் இன்னும் சில தினங்களுக்கு பருவமழை தொடர்ந்தால் நீர்மட்டம் விரைவில் சதம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் இன்று முதல் பல மாவட்டங்களில் நல்ல மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நெல்லை, தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் டிசம்பர் மாதத்தில் நிறைந்தால் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க முடியும் என்பதால், கனமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Related Stories: