இன்று 2வது ஒருநாள் ஆட்டம்: பதிலடி கொடுக்குமா இந்தியா? தொடரை வெல்ல வங்கதேசம் முனைப்பு

டாக்கா: இந்தியா - வங்கதேசம் மோதும் 2வது ஒருநாள் போட்டி, மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் இன்று காலை 11.30க்கு தொடங்குகிறது. வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி மிர்பூர் தேசிய அரங்கில் இன்று நடக்கிறது. ரோகித் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியில் வென்று 1-1 என சமநிலை ஏற்படுத்துவதுடன், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்குகிறது.

சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரை இழந்த நிலையில், இந்திய வீரர்கள் ‘தொடர்’ தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆல் ரவுண்டர் அக்சர் படேல் உடல்தகுதியும் இந்திய அணி நிர்வாகத்துக்கு கவலை தருவதாக உள்ளது. முதல் போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், முன்னணி பேட்ஸ்மேன்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறியதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக, தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் புல் ஷாட்களை விளையாடி விக்கெட் தானம் செய்தனர். பேட்டிங் வரிசையை பலப்படுத்தும் முயற்சியாக இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, ரஜத் பத்திதர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இந்திய அணியுடன் ஒப்பிடுகையில், வங்கதேச அணி கூடுதல் உற்சாகத்துடன் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 2வது முறையாக  சொந்த மண்ணில் தொடரை வென்று சாதனை படைக்க அந்த அணி முயற்சிக்கும். இதற்கு முன்பு 2015ல் வங்கதேசம் சென்ற இந்தியா 1-2 என்ற கணக்கில் தொடரை முதல் முறையாக இழந்தது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி 99 சதவீதம் உறுதியான நிலையில், கடைசி விக்கெட்டுக்கு மெஹிதி  ஹசன் மிராஸ் -  முஸ்டாபிசுர் ரகுமான்   ஜோடி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை தட்டிப் பறித்தது. இன்றைய போட்டியில் அந்த அணி மாற்றம் ஏதுமின்றி களமிறங்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

கோஹ்லி 1000: வங்கதேசத்தில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 1000 ரன் சேர்த்த 2வது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற, இந்திய நட்சத்திரம் விராத் கோஹ்லிக்கு இன்னும் 21 ரன் மட்டுமே தேவை. அவர் இதுவரை 979 ரன் (சராசரி 75.30) எடுத்துள்ளார். இலங்கையின் குமார் சங்கக்கரா 1045 ரன் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.

Related Stories: