முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக ரயில் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தென்காசி பயணம்: மதுரையில் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார்

சென்னை: முதல்வராக பதவியேற்ற பின் முதன் முறையாக எழும்பூரில் இருந்து ரயில் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தென்காசி செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், மதுரையில் அம்பேத்கர் சிலையையும் திறந்து வைக்கிறார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின், சென்னை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களிடம் கோரிக்கை மனுக்களையும் வாங்கி, அதை நிறைவேற்றும் பணியிலும் வேகமாக ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக தனி துறையே செயல்பட்டு வருகிறது. பொதுவாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், விமான பயணத்தை தேர்வு செய்து வந்தார். தற்போது முதன்முறையாக சென்னை, எழும்பூரில் இருந்து நாளை மாலை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்காசி செல்கிறார். தென்காசிக்கு நாளை மறுதினம் (8ம் தேதி) காலை சென்றடையும் முதல்வர் தென்காசி மற்றும் மதுரையில் இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். அதன்படி 8ம் தேதி காலை தென்காசி சென்றடையும் முதல்வர் குற்றாலம் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அன்றைய தினம் தென்காசி வேல்ஸ் பள்ளியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

அங்கு நடைபெறும் விழாவில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவடைந்த பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜபாளையம் செல்கிறார். அங்கு மதிய உணவு சாப்பிடுகிறார். ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு சென்று 8ம் தேதி இரவு அங்கு தங்குகிறார்.

மீண்டும் 9ம் தேதி மதுரையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மதுரை மாநகராட்சியின் அலுவலக நுழைவுவாயிலை முதல்வர் திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து மதுரை விமான நிலையத்தின் அருகே நுழைவுவாயில் பகுதியில் உள்ள புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் விமானம் மூலம் 9ம் தேதி மதுரையில் இருந்து சென்னை திரும்புகிறார். தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதன் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: