நாகர்கோவிலில் துணிகரம் வீட்டை உடைத்து 30பவுன் நகை, பணம் கொள்ளை

நாகர்கோவில் :  நாகர்கோவிலில் தொழிலதிபர் வீட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ. 3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் ராமவர்மபுரம் விருந்தினர் மாளிகை எதிரே அப்சர்வேட்டரி தெரு உள்ளது. இங்கு ஓமன் நாட்டில் தொழில் செய்து வரும் யூஜின்தாஸ்(72) என்பவரின் வீடு உள்ளது. யூஜின்தாஸ் தனது மனைவி கமலாவுடன்  சென்னையில் டாக்டராக பணியாற்றி வரும் தனது மகள் வீட்டிற்கு கடந்த சில நாட்கள் முன்பு சென்றுள்ளனர். 6ம் தேதி வருவதாக தனது உறவினர்களிடம் யூஜின்தாஸ் கூறி சென்றிருந்த நிலையில், நேற்று காலை யூஜின்தாசின் வீட்டின் காம்பௌன்ட் கேட் திறந்து கிடந்துள்ளது.

இதனைக் கண்ட அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்து வீட்டிற்குள் பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து யூஜின்தாசிற்கும் நேசமணி நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உளி வைத்து செதுக்கி திறந்தது தெரிய வந்தது. வீட்டில் 3 மாடிகள் இருந்தாலும், படுக்கை அறையில் உள்ள பீரோவை உடைத்து, அதிலிருந்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. 30 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் வரை கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படுகிறது. யூஜின்தாஸ் வந்த பின்னர் தான் எவ்வளவு பணம் நகை கொள்ளை போனது என்பது தெரிய வரும். மேலும், தற்போது கொள்ளை அடித்த விதத்தை பார்க்கும் போது இது புது கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.  

தடயவியல் துறையினர் கை ரேகைகளை பதிவு செய்தனர். டிஎஸ்பி நவீன்குமார் வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொள்ளை நடைபெற்ற வீட்டின் அருகில் உள்ள வீடுகள், வீட்டின் பின்பக்கம் உள்ள விவேகானந்தர் தெரு,  கேபி சாலையில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கொள்ளை நடைபெற்ற தெருவில் பங்களாக்கள் மற்றும் வீடுகள் நெருக்கமாக உள்ள நிலையில், துணிச்சலாக நடைபெற்ற கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்பக்க கதவும் உடைப்பு

கொள்ளையடிக்க வந்தவர்கள் முதலில் வீட்டின் பின்பக்கம் உள்ள   கதவை உடைத்து உள்ளே வந்துள்ளனர். ஆனால், அங்கு உள்அறையும் பூட்டப்பட்டிருந்துள்ளது. இதனால், முன்பக்கம் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். நேற்று இரவு தொடர்ந்து மழை பெய்ததால், கதவை உடைக்கும் சத்தம் யாருக்கும்கேட்கவில்லை என அருகில் உள்ள வீட்டினர் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: