தமிழகம், புதுச்சேரியில் ஜி-20 மாநாடு நடைபெறும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

புதுச்சேரி: ஜி-20 மாநாடு புதுச்சேரி, தமிழகத்தில் நடைபெறவுள்ளதாக ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மோடி@20 நனவாகும் கனவுகள், அம்பேத்கர்& மோடி என்ற இரண்டு தமிழாக்க நூல்கள் வெளியிட்டு விழா நேற்று காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. விழாவில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது: பிரதமர் 2019ல் மங்களூரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் வாக்குறுதி அளித்தபடி, மீனவர்களுக்கு தனித்துறையை ஒதுக்கி, கேபினட் அந்தஸ்துடன் அமைச்சரை நியமித்தார். தேர்தல் அறிக்கையில் கூறியதையெல்லாம் நாம் செய்துவிடுவோம்.

கடந்த 8 ஆண்டுகளில் 1.13 கோடி வீடுகள் கட்ட உத்தரவு பிறக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. பிரதமர் எடுத்த தீர்க்கமான முடிவுகளால் 200 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு கொடுத்ததால் இன்று முகக்கவசம் இல்லாமல் இருக்கிறோம்.பிரதமரின் கனவுப்படி 2047ல் நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற நாடாகவும், அனைவருக்கும் அனைத்தும் கிடைத்த நாடாகவும் இருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளோம். ஜி-20 மாநாடு ஆண்டு முழுவதும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இது டெல்லியில் மட்டுமல்லாமல், தமிழகத்தில் இரண்டு இடங்களிலும், புதுச்சேரி, ஜெய்ப்பூர் என ஒவ்வொரு பகுதிகளிலும் நடக்க இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: