மொழி திணிப்பிற்கு எதிரானவன் நான்; கிரிமினல் பின்புலம் உள்ளவர்களை அரசியலுக்கு கொண்டு வரக்கூடாது: வெங்கய்யா நாயுடு பேச்சு

சென்னை: எந்த மொழியையும் திணிப்பது தவறு, மொழி திணிப்பிற்கு எதிரானவன் நான். கிரிமினல் பின்புலம் உள்ள நபர்களை அரசியலுக்கு கொண்டு வரக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கூறினார். முன்னாள் குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், சென்னை நண்பர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை ‘மீட் அண்டு கிரீட்’ என்ற நிகழ்ச்சிக்கு அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர் ஹண்டே, திருநாவுக்கரசர் எம்பி, ஆர்.எம்.கே. கல்விக் குழும தலைவர் முனிரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், ‘‘தமிழ்நாடு மட்டும் அல்லாமல் தேசம் முழுவதும் வழிகாட்டியாக இருக்க கூடியவர். எப்போதும் நேரத்தை பின்பற்றுவார். பாராளுமன்றத்தில் புதிதாக வந்த அனைவருக்கும் அவர்களின் தாய்மொழிகளில் பேச உத்வேகம் கொடுத்தவர்’’ என்றார். முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பேசுகையில், ‘‘நாட்டின் சட்டத்துறை, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் மேலும் சில சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.  அதிலும் குறிப்பாக நீதிபதிகளை, நீதிபதிகளே நியமிக்கும் கொலிஜிய முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அரசோ, நீதிபதிகளோ நீதிபதிகளை நியமனம் செய்யக்கூடாது. அதற்கான ஒரு தனி சிஸ்டத்தை கொண்டு வர வேண்டும்.

ஒவ்வொருவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தாய்மொழியிலேயே பேச வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

எல்லா மொழியும் தேசிய மொழிதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த மொழியையும் திணிப்பது தவறு. மொழி திணிப்பிற்கு எதிரானவன் நான். தமிழ்மொழியும், தேசிய மொழிதான். தமிழ்நாட்டில் உள்ள வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ்மொழியை கற்க வேண்டும். அதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிரிமினல் பின்புலம் உள்ள நபர்களை அரசியலுக்கு கொண்டு வரக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கான சீர்திருத்த நடவடிக்கை நம் சட்டத் துறையில் கொண்டு வர வேண்டும். அதேபோல அரசியல்வாதி மீது உள்ள வழக்குகளை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பேரவையின் மாண்பை காக்கும் வகையில் கண்ணியத்துடன் பேச வேண்டும் தங்களுடைய கருத்துகளை நியாயமான முறையில் பேரவையில் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: