நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை: ஏமாற்றத்துடன் திரும்பினர்

சேத்தியாத்தோப்பு: என்எல்சிக்காக நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள்  போராட்டம் நடத்தினர். இதனால் அளவீடு செய்ய முடியாமல் அவர்கள் திரும்பி சென்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிர்வாகம், அனல் மின் நிலையம் சுரங்கம் 2 விரிவாக்க பணிக்காக கத்தாழை, கரிவெட்டி மும்முடிசோழகன், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி நேற்று என்எல்சி அதிகாரிகள் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட போலீசாருடன் கரிவெட்டி கிராமத்தில் நில அளவீடு செய்ய வந்தனர். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

என்எல்சி நிர்வாகம் எங்களுக்கான இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்கினால் மட்டுமே நிலங்களை கையகப்படுத்த அனுமதிப்போம் என்று கூறினர்.  இதனால் அதிகாரிகள் வேறு வழியின்றி  நில அளவீடு பணியை கைவிட்டு கிளம்பி சென்றனர். அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: