மேட்டுப்பாளையம்-கோவை இடையே தினசரி ரயில் சேவை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-கோவை இடையே பயணிகள் ரயில் இனி வாரத்தின் ஏழு நாட்களும் இயக்கப்பட உள்ளது. இந்த தினசரி ரயில் சேவையை நேற்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவை முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மெமு மின்சார பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ஐந்து முறையும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஐந்து முறையும் இயக்கப்பட்டு வந்தது. இதனை மேட்டுப்பாளையம், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கோவைக்கு செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், என ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பயணிகள் ரயிலை ஞாயிற்றுக்கிழமையும் இயக்க கடந்த இரு  ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அது ஏற்கப்பட்டு இந்த தினசரி ரயில் சேவையின் துவக்க விழா நேற்று மாலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. மாலை 4.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு  ரயில் சேவையை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மீன்பிடி துறைமுகத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில், சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில் மீண்டும் நின்று செல்வதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், எம்பி கல்யாணசுந்தரம் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், செங்கல்பட்டுக்கும், விழுப்புரத்துக்கு இடையே மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: