புதிய உச்ச வரம்பு நிர்ணயம் ரஷ்ய கச்சா எண்ணெய் பீப்பாய் 60 டாலர் விலை: ஐரோப்பிய யூனியன், ஜி7 நாடுகள் நடவடிக்கை

லண்டன்: ரஷ்ய கச்சா எண்ணெயை இனி பீப்பாய் 60 டாலர் என்ற விலையில் விற்பனை செய்ய வேண்டுமென புதிய விலை உச்ச வரம்பை ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜி7 நாடுகள்  நிர்ணயம் செய்துள்ளன. இதனை ஏற்க ரஷ்யா மறுத்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்ததால், ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.  கடல் வழியாக விநியோகிக்கப்படும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு விலை உச்ச வரம்பை ஐரோப்பிய யூனியன் நேற்று முன்தினம் நிர்ணயம் செய்தது.

இனி ரஷ்யாவிடமிருந்து எந்த நாடு கச்சா எண்ணெய் வாங்கினாலும் பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலரில் வாங்க வேண்டுமென அறிவித்தது. இதனை பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 அமைப்பு வரவேற்றது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய யூனியன் முடிவிற்கு ஆதரவு தெரிவித்தன.

இந்த விலை உச்ச வரம்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜி7 நாடுகளில் கடல் வழி ரஷ்ய கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு முழு தடையும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஆனாலும் வளரும் நாடுகள் ஸ்தம்பிக்கக் கூடாது என்பதால் அந்நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை பெற்றுக் கொள்ள எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஐரோப்பிய யூனியனின் இந்த விலை உச்ச வரம்பை ரஷ்யா நிராகரித்துள்ளது. அந்நாட்டின் அரசு செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அளித்த பேட்டியில், ‘‘இந்த விலை வரம்பை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த நடவடிக்கை ரஷ்யா ஆய்வு செய்து வருகிறது’’ என்றார்.

என்ன காரணம்?

ரஷ்யாவின் பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் விற்பனை முக்கிய பங்காற்றுகிறது. எனவே ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே ஐரோப்பிய நாடுகள் விலை உச்ச வரம்பை அறிவித்துள்ளன. குறைந்த விலை நிர்ணயிப்பதால் ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கும், அந்நாடால் ஆயுதங்களை வாங்க முடியாது என்பது ஐரோப்பிய நாடுகள் கூறும் காரணம்.

ஆனால், இந்த விலை வரம்பு எந்த விதத்திலும் ரஷ்யாவை பாதிக்காது என உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது. ஏற்கனவே கச்சா எண்ணெயை 65 டாலருக்கு ரஷ்யா தந்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் இந்த விலை வரம்பு பெரிய அளவில் ரஷ்யாவை பாதிக்க வாய்ப்பில்லை.

Related Stories: