திருவையாறில் நடவு பயிரை அழித்து புறவழி சாலை அமைக்க எதிர்ப்பு நெற்பயிரை கையில் ஏந்தி விவசாயிகள் போராட்டம் பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு

திருவையாறு: திருவையாறு அருகே சம்பா பயிரை அழித்து புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நெற் பயிரை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், பெரும்புலியூர், திருவையாறு ஆகிய ஊர்கள் வழியாக 6.74 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.191.34 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த புறவழிச்சாலை முழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதால், நெல், கரும்பு, வாழை, தென்னை மரங்கள், வெற்றிலைக் கொடிக்கால் அடங்கிய நிலங்களை அழித்து அதில் சாலை அமைக்கப்பட்டால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே திருவையாறில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போதும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது 150 அடி அகலம் கொண்ட சாலையில் 100 அடி அளவுக்கு செம்மண் நிரப்பப்பட்டு வருகிறது. அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர் பகுதியில் பல நூறு ஏக்கரில் சம்பா நெற் பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்களை அழித்து அதன் மீது பொக்லைன் இயந்திரங்களை கொண்டு செம்மண் கிராவல்கள் பரப்பப்படுகிறது. நேற்று கண்டியூர் பகுதியில் சம்பா நெற்பயிர் மீது செம்மண் கிராவல் கொண்டு நெற்பயிரை அழிப்பதை பார்த்த விவசாயிகள் திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனர். மேலும் நெற்பயிரை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசியதாவது, விளை நிலங்களில் பயிர்கள் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் முற்றிலும் மண் கொட்டி பயிர்களை அழிப்பது சட்ட விதி மீறல் ஆகும். இதற்கு உரிய நீதி கிடைக்கவேண்டும்.

அறுவடை முடியும் வரை இந்த சாலை அமைக்கும் பணி நடைபெற கூடாது என்றார். இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் பழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பி.ஆர்.பாண்டியனிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட கலெக்டரிடம் புறவழிச்சாலை சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளலாம் என்று தெரிவித்தார். அனைவரும் மாவட்ட கலெக்டரை சந்திக்க சென்றனர். இதனால் புறவழிச்சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Related Stories: