கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட 45 கட்டுமான இடங்களில் ரூ.51 ஆயிரம் அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட 45 கட்டுமான இடங்களில் ரூ.51 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில்,  சென்னை மாநகராட்சி பகுதிகளில் கையினால் இயங்கும் 229 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 57 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்களை கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குடிசைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் ஆகிய பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. திறந்த நிலையில் உள்ள கிணறுகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் காலிமனைகள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு வளரிடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் 3,189 இடங்களில் மாநகராட்சி களப் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 45 கட்டுமான இடங்களில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு ரூ.51600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 2919 இடங்களில் கொசுப்புழு உருவாவதற்கு வாய்ப்புள்ள பயன்பாடற்ற 3595 கி.கி. எடையுள்ள டயர்கள், 5360 கி.கி. எடையுள்ள தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.5,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் பயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமென்ட் தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ளதால் அவற்றை உடனடியாக அகற்றி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதை தடுக்க வேண்டும், கிணறு மேல்நிலைத் தொட்டி கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகாதவண்ணம் மூடி வைக்க வேண்டும்.  

தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு குளிர்பதன பெட்டியின் கீழ்த்தட்டு, மணிபிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரம் ஒருமுறை அகற்றி தங்களின் வீடு, மொட்டை மாடிகளில் உள்ள மழைநீர்தேங்கும் பொருட்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மேலும், நீர் வழித்தடங்கள் மற்றும் மழைநீர் செல்லும் கால்வாய்களின் அருகே குப்பை மற்றும் தேவையற்ற பொருட்களை கொட்டுவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: