மாணவிக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு, நந்தனம் ஒய்எம்சிஏ உடல் கல்வியியல் கல்லூரி முதல்வர் மீது பாலியல் வழக்கு; சைதாப்பேட்டை உதவி கமிஷனர் தலைமையில் தீவிர விசாரணை

சென்னை: உடல் கல்வியியல் கல்லூரி மாணவிக்கு செல்போனில் குறுஞ்செய்திகள் அனுப்பி பாலியல் தொந்தரவு அளித்த கல்லூரி முதல்வர் மீது அனைத்து மகளிர் போலீசார் பாலியல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் உடல் கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி 1920ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கல்லூரியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பிரபலமான உடல் கல்வியியல் கல்லூரி என்பதால், விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த உடல் கல்வியியல் கல்லூரிக்கு ஜான் ஆபிரகாம் முதல்வராக உள்ளார்.

சைதாப்பேட்ைட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒய்எம்சிஏ உடல் கல்வியியல் கல்லூரியில் படித்து வரும் 23 வயது மாணவி ஒருவர் பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். மாணவியின் புகார் குறித்து போலீசார் கூறியதாவது: புகார் அளித்த மாணவிக்கு 23 வயது. இவர், கல்லூரி விடுதியில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மாணவிக்கு அடிக்கடி உதவி செய்வது போல் கல்லூரி முதல்வர் ஜான் ஆபிரகாம் அவரது செல்போன் எண்ணை வாங்கியதாக கூறப்படுகிறது. பிறகு இரவு நேரத்தில் மாணவிக்கு குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். முதலில் விளையாட்டு பயிற்சி தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பிய முதல்வர், பிறகு மாணவி அதற்கு பதில் அளித்ததால், ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பி வந்துள்ளார். பிறகு தனது அறைக்கு நேரில் அழைத்து, தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்து வருவதாக கூறி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி, முதல்வரை கடுமையாக எச்சரித்துவிட்டு வந்துள்ளார். பிறகு விடாமல் மாணவிக்கு செல்போனில் ஆபாச புகைப்படங்களுடன் குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த மாணவி, சம்பவம் குறித்து புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த புகாரின்படி, அனைத்து மகளிர் போலீசார் மாணவியின் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில் கல்லூரி முதல்வர் வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது உறுதியானது. அதற்கான ஆதாரங்கள் செல்போனில் இருந்தது.அதைதொடர்ந்து ஒய்எம்சிஏ உடல் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜான் ஆபிரகாம் மீது பாலியல் கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், புகார் அளித்த மாணவி முதல்வர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பாலியல் குற்றச்சாட்டு குறித்து கல்லூரி முதல்வரிடம் சைதாப்பேட்டை உதவி கமிஷனர் கிறிஸ்டின் ஜெயசீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டியும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை இறுதியில் முதல்வர் ஜான் ஆபிரகாம் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. கல்லூரி முதல்வர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அந்த கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: